மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது; “சர்தார் வல்லபாய் பட்டேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் நாம் ஈடுபட்டு இருக்கிறோம். வந்தே மாதரம் பாடல் நமது சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியது.
நமது போர் முழக்கத்தின் அடிப்படையாக இருந்தது வந்தே மாதரம். வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு என்பது இந்தியாவின் அவசரகாலம் அமல்படுத்தப்பட்ட காலத்தில் வந்தது. வந்தே மாதரத்தின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது இந்தியாவின் ஜனநாயகம் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த 150வது ஆண்டு இந்தியாவின் சுயசார்பு காலத்தில் கொண்டாடி வருகிறோம்.
தற்போது நாம் மேற்கொள்ளும் இந்த விவாதம் எதிர்கால இந்தியாவிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். வந்தே மாதரம் இயற்றப்பட்டபோது நாடு அடிமைச் சங்கிலியில் சிக்கி இருந்தது. நாடு அடிமைப்பட்டு இருந்தது நமது வரலாற்றில் கருப்பு அத்தியாயம்.
வந்தே மாதரம் ஊக்குவித்த சுதந்திரப் போராட்டத்தால் நாம் இன்று சுதந்திரமாக இங்கு அமர்ந்திருக்கிறோம். ஆகவே இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கூட்டணி என்றெல்லாம் இல்லை. வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாக வந்தே மாதரம் நம்மை ஊக்குவிக்கும்.
ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கிலாந்து ராணியை கடவுள் காப்பாற்ற வேண்டும் என்ற பாடலை தான் இந்தியர்கள் பாட வேண்டும் என்று நிர்பந்தித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் தான் வந்தே மாதரம் பாடல் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது.
இந்தியாவின் கனவுகளை 150 வருடங்களுக்கு முன்பாகவே சுமந்து இருந்தது வந்தே மாதரம் பாடல். வந்தே மாதரம் என்பது வெறும் அரசியல் வார்த்தை கிடையாது அது இந்தியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தை.
வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்கள் போட்டு வைத்த அத்தனை சங்கிலிகளையும் உடைத்தெறிந்தது. வந்தே மாதரம் எனும் பாடல் அரசியல் போராட்டத்திற்கான மந்திரம் மட்டுமல்ல, ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்ல, அதையும் தாண்டி ஒரு சிந்தனையாக நமது தாய் நாட்டை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என ஒவ்வொரு மக்களிடத்திலும் எழுச்சியை உருவாக்க இயற்றப்பட்ட பாடல் இது.
சுதந்திரத்திற்கான விதைகளை விதைத்ததே வந்தே மாதரம் பாடல் தான். இந்தியாவை ஆங்கிலேயர்கள் வலுவிழந்த நாடாகவும், சிலை வழிபாடு கொண்ட நாடாகவும் இழிவு படுத்தினார்கள்.
நம் நாட்டில் இருந்த மக்களிடத்திலும் இதே மனநிலை இருந்தது, ஆனால் இந்த மனநிலையை மாற்ற வேண்டும் என்பதற்காக சட்டர்ஜி வந்தே மாதரம் பாடலை உருவாக்கி இந்தியாவின் வலிமை என்ன என்பதை வெளிக்கொண்டு வந்தார்.
காவிரி, கங்கை, சிந்து, யமுனை உள்ளிட்ட பல நதிகள் எப்படி மக்களுடன் பின்னிப்பிணைந்து உள்ளதோ அதேபோல வந்தே மாதரம் பாடல் மக்களோடு பின்னிப்பிணைந்து உள்ளது. உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு கவிதை போன்றது வந்தே மாதரம் பாடல்.
1857க்கு பின்னர் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இருப்பது மிகவும் கடினமானது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் இருப்பது ஒரு கனவாக இருந்தது. இந்தியாவை துண்டாடலாம் ஆட்சிகளை கைப்பற்றலாம் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தியாவில் இருந்த பிளவின் அடிப்படையில் ஆட்சி செய்வது ஆங்கிலேயர்களுக்கு எளிதாக அமைந்தது.
இந்தியர்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்ய வேண்டும் என்பதை ஆங்கிலேயர்கள் கொள்கையாக வைத்திருந்தார்கள். ஆனால் வங்காளத்தின் அறிவு அறிவுசார் சக்தியாக இந்தியர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தை சிதைத்து விட்டால் ஒட்டுமொத்த நாட்டையும் சேர்த்து விடலாம் என ஆங்கிலேயர்கள் கனவு கண்டார்கள். அதனாலேயே வங்காளத்தை பிரித்தார்கள். ஆனால் வந்தே மாதரம் பாடல் ஆங்கிலேயர்கள் கனவுக்கு தடைக்கல்லாக இருந்தது.
வங்காளம் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிலும் மக்களின் ஊக்கமாக வந்தே மாதரம் பாடல் இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை பிளவுபடுத்தி இருந்தாலும், வந்தே மாதரம் பாடல் இந்தியர்களை ஒன்றிணைத்தது. உலக அளவில் வந்தே மாதரம் பாடலுக்கு இணையான சக்தி வாய்ந்த பாடல் கிடையாது. அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இந்தியர்களின் உணர்வுகளை சுதந்திரத்தை நோக்கி தூண்டி விட்டது வந்தே மாதரம் பாடல். ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டி மிகப்பெரிய சுதந்திர உணர்வை வ.உ.சி வெளிப்படுத்தினார். தமிழ் மொழியில் கவிதைகளை எழுதி ஆங்கிலேயர்களை கலங்கடித்தவர் தமிழரான சுப்பிரமணிய பாரதி” என பேசினார்.
December 08, 2025 3:16 PM IST

