ஈரானுக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்தின் பணியாளர்களை அமெரிக்க இராணுவம் தேடிவரும் நிலையில் அவர்களைப் பிடித்துத் தருமாறு ஈரானிய அரசு ஊடகங்கள் அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், அமெரிக்க விமானிகளை உயிருடன் பிடித்து ஒப்படைப்பவர்களுக்குப் பாரிய அளவிலான பணப்பரிசு மற்றும் வெகுமதிகள் வழங்கப்படும் என ஈரான் அரசு வாக்குறுதி அளித்துள்ளது.
இது குறித்து ஈரான் அரசுத் தொலைக்காட்சியான IRIB-இன் செய்தி வாசிப்பாளர் ஒருவர் நேயர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.
இராணுவப் படை
அதில், எதிரி நாட்டு விமானி அல்லது விமானிகளை உயிருடன் பிடித்துச் சட்ட அமலாக்கத்துறை மற்றும் இராணுவப் படைகளிடம் ஒப்படைப்பவர்களுக்கு மதிப்புமிக்க வெகுமதியும் பரிசும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ISNA செய்தி நிறுவனத்தின் தகவலின்படி ஈரானின் கோகிலுயே மற்றும் போயர்-அகமது (Kohgiluyeh and Boyer-Ahmad) மாகாண ஆளுநர், குறித்த குற்றவாளி அமெரிக்க விமானியை ஒப்படைப்பவர்களுக்குப் பத்து பில்லியன் தோமன்கள் (சுமார் $76,000 டாலர்கள்) பரிசு வழங்கப்படும் எனப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இருப்பினும், வீழ்த்தப்பட்ட அந்தப் போர் விமானத்தின் இரண்டு ஊழியர்களில் ஒருவரை அமெரிக்கப் படைகள் ஏற்கனவே பத்திரமாக மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் எஞ்சியிருக்கும் மற்றொரு விமானியைத் தேடும் பணி விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு தரப்புக்கும் இடையே இது ஒரு நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
