நிபோங் திபால்:
சுங்கை பாக்காப் பகுதியில் முகமூடி அணிந்த கும்பலால் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரின் போலீஸ் காவல் (Remand) மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 23 மற்றும் 36 வயதுடைய அந்த இருவரிடமும் மேலதிக விசாரணை நடத்துவதற்காக, அவர்களின் போலீஸ் தடுப்புக் காவல் நாளை முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில், இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, அனைவரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் இன்னும் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு உணவகத்தில் அமர்ந்து பானம் அருந்திக் கொண்டிருந்த மூன்று வியாபாரிகள் மீது, சுமார் 15-க்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில், தற்போது அவர் சீரான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் (கொலை குற்றம்) கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
The post சுங்கை பாக்காப் கொலை வழக்கு: மேலும் இருவருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் நீட்டிப்பு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

