Last Updated:
கடந்த திங்களன்று அவசர வேலை காரணமாக உரிமையாளர் விடுப்பு அளித்ததாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, மாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், நகைக்கடை ஷோரூமில் வேலை பார்த்து வந்த பெண், சுமார் ஒரு கோடிய 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை சீருடைக்குள் மறைத்து வைத்து திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தவர் ஹர்ஷிதா ஷெட்டி. கடந்த 11 மாதங்களாக அந்த கடையில் ஹர்ஷிதா வேலைபார்த்து வந்துள்ளார். கடந்த திங்களன்று அவசர வேலை காரணமாக உரிமையாளர் விடுப்பு அளித்ததாக சக ஊழியர்களிடம் கூறிவிட்டு, மாலை சுமார் 4.30 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளார். அன்று மாலை தங்க பிரேஸ்லெட் ஒன்று காணாமல் போனதை ஊழியர்கள் கவனித்துள்ளனர்.
இந்நிலையில், உடனே கடையில் உள்ள அனைத்து நகைகளையும் முழுமையாக ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது ஊழியர்கள் அதிர்ந்து போயினர். சோதனையில், சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள், கைக்கடிகாரங்கள் மற்றும் இதர ஆபரணங்கள் காணாமல் போனது தெரியவந்தது. அனைவருக்கும் ஹர்ஷிதா மேல் சந்தேகம் திரும்பியுள்ளது. ஷோரூம் உரிமையாளர் தர்ஷன்பாயிடம் ஹர்ஷிதா குறித்து விசாரித்தபோது, தான் எந்த விடுப்பும் அந்த பெண்ணுக்கு அளிக்கவில்லையே எனக் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்ததில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட ஹர்ஷிதா போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


