சீன மருத்துவர்கள் முதல் முறையாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றி கல்லீரலை மூளைச்சாவடைந்த மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இது எதிர்காலத்தில் உயிரை பாதுகாக்கும் புதிய தீர்வாக அமையும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல நோயாளிகள் பன்றி சிறுநீரகங்களும் இதயங்களும் பெற்றுள்ளார்கள். ஆனால், கல்லீரல் மாற்றம் சிக்கலானதாக இருந்து வந்தது.
உலகம் முழுவதும் கல்லீரல் தானத்திற்கான தேவை அதிகரித்து வருவதால், மரபணு திருத்தம் செய்யப்பட்ட பன்றி உறுப்புகள், மனித தானம் கிடைக்கும் வரை தற்காலிகமாக நோயாளிகளுக்கு ஆதரவாக இருக்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர்.
சீனாவின் சியானில் உள்ள நான்காவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் நேச்சர் Nature இதழில் இந்த புதிய முயற்சியை அறிவித்துள்ளனர்.
பலரும் இந்த சாதனையை பாராட்டி வருகின்றனர். இருப்பினும், இது ஆரம்ப நிலை முயற்சி என்பதால், பன்றி உறுப்புகள் மனிதர்களுக்கான நிரந்தர மாற்று தீர்வாக இருக்கும் என உறுதி செய்ய முடியாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


