மியான்மரில் கடந்த மார்ச் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை நண்பகல் 12:50 மணி அளவில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிர்ந்து சரிந்த வானுயர கட்டடங்களால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் எதிரொலித்திருக்கிறது.
மியான்மர் நிலநடுக்கத்தினால் இதுவரையில் 1644 நபர்களுக்கு மேல் இறந்துள்ளதாகவும் 3,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பரவலாக பகிரப்பட்டு வைரல் ஆகிறது. இந்த வீடியோ சீனா, யுன்னானில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் ஆகும்.
நிலநடுக்கம் தொடங்கிய போது வார்டு முழுவதும் உள்ள பச்சிளம் குழந்தைகளின் சக்கர படுக்கைகள் கட்டுப்பாட்டின்றி இங்கும் அங்கும் உருண்டோட தொடங்கின. நிலநடுக்கத்தின் அதிர்வுகளால் தண்ணீர் குவளையில் உள்ள தண்ணீர் அறை முழுவதும் பரவியது. இந்த வழுக்கும் தரையில் நிற்பதே கடினம், ஆனால் அன்று பணியிலிருந்து இரண்டு சிறகிலா செவிலியர் தேவதைகள், அங்குள்ள பச்சிளம் குழந்தைகளை அரவணைத்து தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றி உள்ளனர்.

