அருணாச்சலப் பிரதேசம் செக்டார் அருகே எல்லைப் பகுதியில் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சீனா ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தற்போது சீனா LAC-ன் மேற்குப் பகுதியில் ஒரு புதிய ரயில் பாதையை அமைக்கத் தொடங்கியுள்ளது. இதை ஒரு திட்டமிடப்பட்ட வழிமுறை மற்றும் பாதுகாப்பு ரீதியிலான கண்ணோட்டத்தில் பார்த்தால் மிகவும் சென்சிடிவான விஷயமாக கருதப்படுகிறது.
ஜி ஜின்பிங்கின் தலைமையிலான சீன அரசு இதனை அதிகாரப்பூர்வமாக பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்காக திபெத்தின் தலைநகரான லாசா வரை ரயில் வலையமைப்பை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறுகிறது. ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவிற்கு கடும் ராணுவ மற்றும் பாதுகாப்பு தாக்கங்களை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
போக்குவரத்தை மேம்படுத்துகிறோம் என்ற போர்வையில் மத்திய திபெத்தில் ஒரு புதிய உத்தியாகவே குறிப்பிட்ட ரயில் பாதை அமைக்கும் பணியை சீனா தொடங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிடப்பட்டிருக்கும் இந்த புதிய ரயில் பாதையானது, இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு துருப்புக்கள் மற்றும் ராணுவப் பொருட்களை விரைவாக கொண்டுவந்து சேர்ப்பதற்கான சீனாவின் திறனை பெரிதும் அதிகரிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
இந்த சூழலில் சீனா குறிப்பிட்ட ரயில் பாதையை அமைத்து முடிக்க மிக வேகமாக செயல்பட்டு வருவதாகவும், இந்த கடின திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாகவும் நிபுணர்கள் ANI-யிடம் தெரிவித்தனர். அடுத்த பத்தாண்டுகளில், திபெத்திய பீடபூமி பகுதி முழுவதும் மொத்தம் சுமார் 5,000 கிலோ மீட்டர் ரயில் பாதைகளை கட்டமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இமயமலையில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து ஆய்வு செய்யும் திபெத் கொள்கை நிறுவனத்தின் ஆராய்ச்சி அறிஞரான ட்சேவாங் டோர்ஜி, இந்திய எல்லைக்கு அருகில் சீனா அமைக்க திட்டமிட்டுள்ள புதிய ரயில் பாதை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் என அனைத்தும் அந்த நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்புடையவை என்று எச்சரித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள கிழக்குப் பகுதியில், தெற்காசிய நாடுகளுக்கு எதிராக பயன்படுத்தக்கூடிய நீர்வளங்களை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் சீனா கொண்டுவந்துள்ளதாகவும் டோர்ஜி குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அருகே மேற்குப் பகுதியில், அது ஒரு புதிய ரயில் பாதையை அமைத்து வருகிறது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு சீனா மிகவும் எச்சரிக்கையாக மற்றும் எதிர்காலத்திற்காக பல உத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
இந்தப் பகுதியில் சீனா ஒரு ரயில் பாதையை அமைப்பது மட்டுமல்லாமல், Nagchu மற்றும் Ngari இடையே ஒரு நெடுஞ்சாலையையும் அமைத்து வருவதாக திபெத்திய நிபுணர் கூறியுள்ளார். இந்த திட்டங்கள் PLA துருப்புக்களையும், உபகரணங்களையும் அந்தப் பகுதி முழுவதும் விரைவாக கொண்டுசெல்வதை எளிதாக்கும் நோக்கம் கொண்டவை என்பது இப்போதே தெளிவாக தெரிவதாக எச்சரித்துள்ளார்.
ஒருவேளை இந்தியா – சீனா இடையே எதிர்காலத்தில் வெளிப்படையான மோதல் ஏற்பட்டால், சீனாவின் இந்த உள்கட்டமைப்பு இந்தியாவை எதிர்க்க அந்நாட்டிற்கு பெரிதும் உதவும். ராணுவ பயன்பாட்டைத் தவிர, புதிய ரயில் பாதை சீனாவின் வளர்ந்துவரும் AI மற்றும் தொழில்நுட்ப தொழில்களுக்கு முக்கியமான யுரேனியம் மற்றும் லித்தியம் போன்ற மதிப்புமிக்க இயற்கை வளங்களை திபெத்திலிருந்து கொண்டுசெல்லவும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திபெத்திய எழுத்தாளரும், ஆர்வலருமான Tenzin Tsundue, சீனாவின் புதிய ரயில் திட்டம் குறித்து தீவிரமான கவலைகளை எழுப்பியுள்ளார். இந்த ரயில் பாதை மேற்கு திபெத் வழியாக, கைலாஷ் மலை மற்றும் நகாரி அருகே சென்று, பின்னர் மத்திய திபெத்தில் உள்ள ஷிகாட்சே நோக்கி நகர்ந்து, அக்சாய் சின் வழியாக கிழக்கு துர்கெஸ்தானை (Xinjiang) அடையும். இந்த முன்மொழியப்பட்டிருக்கும் ரயில் பாதை லடாக்கின் டெம்சோக் எல்லையிலிருந்து 20 முதல் 30 கிலோ மீட்டர் தொலைவில் இயங்கும் என்றும், அதாவது இது LAC-க்கு மிக அருகில் செல்லும் என்றும் Tsundue சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த திட்டம் போர்க்கால அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கப்படலாம். குறிப்பாக, இந்த ரயில் பாதை இந்திய இமயமலைக்கு இணையாக, நேபாளம் மற்றும் உத்தராகண்ட் அருகே இயங்கும் என்பதால் இந்தியாவைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என எச்சரித்தார்.
மேற்கு திபெத்தில் சீனா குறிவைத்துள்ள பகுதியில் தங்கம், தாமிரம், துத்தநாகம் மற்றும் லித்தியம் நிறைந்துள்ளன. மொத்தத்தில் இந்த ரயில் பாதை திட்டம் சுரங்கம் மற்றும் ராணுவ ஆதிக்கம் என இரண்டையும் கைக்குள் வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
October 20, 2025 4:01 PM IST