‘தி கவர்’ என்ற மீடியா அறிக்கையின்படி, சிலிக்கான் அல்லது ரப்பரால் செய்யப்பட்ட இந்த ஃபேசிஃபயர்கள், ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் 10 முதல் 500 யுவான் வரை (சுமார் ₹120 முதல் ₹6,000 வரை) விற்பனை செய்யப்படுகின்றன. மன அழுத்தத்தைக் குறைத்து, நல்ல உறக்கத்தைத் தரும் என்று உறுதியளித்து, குழந்தைகளின் தயாரிப்பை பெரியவர்களுக்கான பதிப்பாக சந்தைப்படுத்தப்படுகிறது. சில இணையவழி விற்பனையாளர்கள் ஒரே மாதத்தில் 2,000-க்கும் மேற்பட்ட ஃபேசிஃபயர்களை விற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.
ஒரு இ-காமர்ஸ் தளத்தில் இந்தத் பிராடக்டை வாங்கிய ஒருவர், “இது மிகவும் தரமானது, மென்மையானது, இதை பயன்படுத்தும்போது இதமாக உணர்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
மற்றொருவர், “புகைப்பிடிப்பதை நிறுத்த இது அற்புதமாக உதவுகிறது. இது எனக்கு உளவியல் ரீதியான ஆறுதலைத் தருகிறது மற்றும் புகைப்பழக்கத்தை விடும் காலங்களில் ஏற்படும் பதற்றத்தையும் குறைக்கிறது,” என்று கூறுகிறார்.
மற்றொருவர், “வேலைப்பளு அதிகமாக இருக்கும்போது, நான் இதை பயன்படுத்துகிறேன். குழந்தைப் பருவத்தில் கிடைத்த ஒருவித பாதுகாப்பு உணர்வை நான் பெறுவதாக உணர்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
மன அழுத்த மேலாண்மை, புகைப்பிடிப்பதை நிறுத்துதல் மற்றும் சரியாக சுவாசிப்பதற்கு உதவுதல் போன்ற நன்மைகளுக்காக இது விளம்பரப்படுத்தப்பட்டாலும், பெரியவர்களுக்கான ஃபேசிஃபயர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இத்தகைய கருவிகளை நீண்டகாலம் பயன்படுத்துவது, பற்கள் மற்றும் பல் வரிசை பாதிப்பு, தாடை வடிவத்தில் மாற்றங்கள், வாயின் மேல் அண்ணத்தில் மாற்றங்கள், தொற்றுநோய்கள் மற்றும் பேச்சுப் பிரச்சனைகள் போன்ற வாய்வழிப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கூறிய ஊடகம், தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தின் செங்டு நகரைச் சேர்ந்த பல் மருத்துவர் டாங் காமின் என்பவரின் கூற்றை மேற்கோள் காட்டியுள்ளது. அதன்படி, ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கும் மேலாக பெரியவர்கள் ஃபேசிஃபயர்களைச் பயன்படுத்துவது பற்களை அவற்றின் இடத்திலிருந்து நகர்த்தக்கூடும் என்று அவர் விளக்கியுள்ளார். “ஃபேசிஃபயர்களால் வாடிக்கையாளர்களின் வாய்க்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், அவற்றின் விற்பனையாளர்களால் வேண்டுமென்றே மறைக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சூப்பியைச் சூப்புவதன் மூலம், ஓராண்டுக்குப் பிறகு உங்கள் பற்களின் நிலை மாறக்கூடும்,” என்று அந்த மருத்துவர் கூறினார்.
ஃபேசிஃபயர்களை நீண்டகாலம் பயன்படுத்துவது, மெல்லும்போது கூட அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் டாங் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல், ஃபேசிஃபயரின் சிறிய பாகங்கள் கழன்று, மூச்சுத்திணறல் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், குறிப்பாகப் பயனர் அதை வாயில் வைத்துக்கொண்டு தூங்கிவிட்டால் ஆபத்து அதிகம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், உளவியல் நிபுணர்களும் இந்த போக்கைப் பற்றிக் கவலை தெரிவித்துள்ளனர். ஃபேசிஃபயர்களைச் சார்ந்திருப்பதன் மூலம், பெரியவர்கள் தங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தின் அடிப்படைக் காரணங்களைக் கையாள்வதற்குப் பதிலாக, அதைத் தவிர்க்கவே முயற்சிக்கிறார்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
August 06, 2025 8:27 PM IST
சீனாவில் திடீர் டிரெண்டாகும் ஃபேசிஃபயர்கள்.. இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன தெரியுமா?

