கோலாலம்பூர்:
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து, சீனாவின் தார்ச்சன் (Darchen) பகுதியில் தங்கியிருந்த 72 மலேசியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் உள்ள மலேசியத் தூதரகம் அவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திபெத் பகுதியில் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்கள் அங்கிருந்து பத்திரமாகப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளையும் தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
சீனாவில் தொடர்புத் தடை காரணமாக இன்னும் 36 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. சீன அதிகாரிகளுடன் இணைந்து அவர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 மலேசியர்களில் 2 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 55 மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் தரவுகளின்படி, இதுவரை 116 வெளிநாட்டவர்கள் உட்பட மொத்தம் 771 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், இதுவரை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ மீட்புக் பட்டியலில் மலேசியர்கள் எவரும் இடம்பெறவில்லை.
காத்மண்டுவில் உள்ள மலேசியத் தூதரகம், நேபாள பேரிடர் மீட்புக் குழு மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து விடுபட்ட மலேசியர்களைக் கண்டறியத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
இது குறித்துத் தகவல் அறிந்தவர்கள் புத்ராஜெயா செயல்பாட்டு மையத்தை +603 8887 4570 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம்.



