திபெத்திய தன்னாட்சிப் பிராந்தியத்தில் உள்ள ‘யார்லங் ஸாங்போ’ நதியின் குறுக்கே உலகின் மிகப்பெரிய அணையை கட்சி வருகிறது சீனா. இந்த ‘யார்லங் ஸாங்போ’ நதி இந்தியாவில் பிரம்மபுத்திரா என அழைக்கப்படுகிறது. ‘யார்லங் ஸாங்போ’ நதியின் குறுக்கே மெகா அணை கட்டப்பட்டால் கீழ் நதிப் பகுதியில் வாழும் இந்தியா மற்றும் வங்கதேச மக்கள் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
அணையால் நதியில் வரும் வண்டல் தடுக்கப்படும். இந்த வண்டல்தான் அசாம் மற்றும் வங்காளதேசத்தின் ஆற்றுப் படுகைகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு வளம் சேர்க்கும். இந்த மெகா அணை அமைந்துள்ள இமயமலைப் பகுதி புவித்தட்டு எல்லையில் உள்ளது. இது நிலநடுக்க அபாயம் நிறைந்த ஒரு பகுதியாகும். இவ்வளவு பெரிய நீர் தேக்கத்தை அமைப்பது, அப்பகுதியில் நில அதிர்வுகளைத் தூண்டலாம் என அஞ்சப்படுகிறது.
நீரோட்டத்தின் இயற்கையான முறை மாறுவதால், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் பகுதியில் உள்ள பிரம்மபுத்திரா நதியை நம்பியிருக்கும் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தனித்துவமான பல்லுயிர்கோளம் பாதிக்கப்படும். ஆனால் இந்த பாதிப்புகளை கண்டுக்கொள்ளாத சீன அரசு, அணை கட்டும் பணிகளை தொடர்ந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய அரசு தனது “மேல் சியாங் பல்நோக்கு சேமிப்பு அணை” திட்டத்தை விரைவுபடுத்தி வருகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், அது இந்தியாவின் மிகப்பெரிய அணையாக இருக்கும்.
மேலும் வட கிழக்கு பகுதியில், பிரம்மபுத்திராவின் 12 துணைப் படுகைகளில் 208 நீர் மின் நிலையங்களை அமைக்க மத்திய மின்சார ஆணையம் திட்டமிட்டுள்ளது. 6.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரண்டு கட்டங்களாக திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 2035- ஆம் ஆண்டு வரையிலான முதற்கட்ட திட்டத்திற்கு 1.91 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. 2035 ஆம் ஆண்டுக்கு பிறகான இரண்டாம் கட்ட திட்டதிற்கு 4.51 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 64.9 கிகா வாட் சாதாரண நீர்மின் திறனும், மேலும் 11.1 கிகா வாட் பம்ப்-சேமிப்பு ஆலைகளிலிருந்தும் மின்சாரம் பெறப்படும். அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா
ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை இது பூர்த்தி செய்யும் என மத்திய மின்சார ஆணையம் கூறியுள்ளது. இந்தத் திட்டம், 2070- ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சுத்தமான எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் உதவும்.
பிரம்மபுத்திரா நதியின் திபெத்தியப் பகுதியான யாருங் சாங்போ (Yarlung Zangbo) நதியில் சீனா அணை கட்டினால், வறண்ட காலங்களில் இந்தியாவின் ஆற்று நீர்வரத்து 85 சதவிகிதம் வரை குறையும். பிரம்மபுத்திரா படுகை 5,80,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதில் சீனாவின் 50.5 சதவீதம், இந்தியாவில் 33.6 சதவீதம், வங்கதேசம் 8.1 சதவீதம் மற்றும் பூட்டானில் 7.8 சதவீதம் ஆகியவை அடங்கும். பிரதான நதி பூட்டான் வழியாகப் பாயவில்லை என்றாலும், பூட்டானின் 96 சதவீத பரப்பளவு பிரம்மபுத்திரா படுகையின் கீழ் வருகிறது.
October 15, 2025 3:28 PM IST
சீனாவின் மிகப் பெரிய அணைக்கு பதிலடி.. பிரம்மபுத்திரா நதியில் நீர் மின் திட்டங்களை செயல்படுத்த இந்தியா மும்முரம்!

