இந்தியா உடனான மோதலின்போது எவ்வித வெளிப்புற உதவிகளையும் பாகிஸ்தான் பெறவில்லை என அந்நாட்டின் ராணுவ தளபதி அஸிம் முனீர் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியபோது, சீன ஆயுதங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்கியதாக இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் ராகுல் ஆா். சிங் தெரிவித்திருந்தார்.
தற்போது, ராகுல் ஆா். சிங்கின் கருத்துக்கு அஸிம் முனீர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மீதான இந்த குற்றச்சாட்டு உண்மையில் தவறானது என்றும், பொறுப்பற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி அழித்தது. இதையடுத்து, பாகிஸ்தானும் இந்தியாவைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இவற்றை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்து அழித்தன.