கோலாலம்பூர்:
வரவிருக்கும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாடு முழுவதும் பன்றி இறைச்சி விநியோகம் சீராக இருப்பதை உற்பத்தியாளர்களும் இறக்குமதியாளர்களும் உறுதி செய்துள்ளதாகத் துணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீபகற்ப மலேசியாவின் பன்றி இறைச்சி தேவையில் 60 விழுக்காட்டை பேராக் மாநிலம் பூர்த்தி செய்கிறது. எனவே, விநியோகத்தில் எவ்விதச் சிக்கலும் இருக்காது.
அதேநேரம் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த முக்கியப் பண்ணையாளர்களுடன் கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆலோசனையில், பண்டிகைக் காலத்தின் போது பண்ணை அளவிலான விலையை (Ex-farm price) உயர்த்த மாட்டோம் என அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
ஒருவேளை சந்தையில் சில்லறை விற்பனை விலை உயர்ந்தால், அதற்குப் பண்ணையாளர்கள் காரணமல்ல என்றும், விநியோகச் சங்கிலியில் உள்ள இடைத்தரகர்களே காரணமாக இருக்கலாம் என்றும் அவர் விளக்கமளித்தார்.
சிலாங்கூரில், குறிப்பாக தஞ்சோங் செப்பாட் (Tanjung Sepat) பகுதியில் ஆப்பிரிக்கப் பன்றி காய்ச்சல் (ASF) பாதிப்பால் உற்பத்தி குறைந்துள்ளது. இருப்பினும், இந்தப் பற்றாக்குறையை ஈடுகட்ட பேராக் மாநிலத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் உறைந்த இறைச்சி (Imported frozen pork) கொண்டு வரப்படுவதால் பாதிப்பு இருக்காது என்றார் அவர்.




