அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த் சென்னை அணியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இது தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள தகவல் ஒன்று சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் மெகா ஏலம் இந்த மாதம் நடைபெற உள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்த ஏலத்தின்போது வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஒவ்வொரு அணியும் 120 கோடி ரூபாய்க்கு வீரர்களை பெறலாம். தற்போது ரிட்டன்ஷன் மூலம் சில வீரர்களை 10 அணிகள் தக்க வைத்து கொண்டுள்ளன.
இதன் அடிப்படையில், ஏலத்திற்கான பத்து அணிகளின் பட்ஜெட் கணிசமாக குறைந்து இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்த அளவில் தோனி, ருத்ராஜ் ஜெயக்வாட், சிவம் துபே, மதிஷா பத்திரன மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ஒட்டுமொத்தமாக சென்னை அணி நிர்வாகம் 65 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
இன்னும் சென்னை அணியிடம் ஏலத்திற்காக 55 கோடி ரூபாய் மட்டுமே மீதம் உள்ளது. இந்த நிலையில் ஏலத்தின் போது ரிஷப் பந்த்தை சென்னை அணி விலைக்கு வாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது தொடர்பாக முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியின் போது, தான் தோனியை ஒருமுறை சந்தித்தபோது ரிஷப் பந்த் அங்கே இருந்ததாக கூறியுள்ளார். நிச்சயமாக மிக முக்கியமான நபர் சென்னை அணிக்கு வருவார் என்று தெரிவித்திருக்கிறார்.
அவரது தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக டெல்லி அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பந்த் அந்த அணி நிர்வாகத்தால் விடுவிக்கப்பட்டார்.
டெல்லி அணி நிர்வாகம் அக்சர் படேல், குல்தீப் யாதவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஆகியோரை 47 கோடி ரூபாய்க்கு தக்கவைத்துக் கொண்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
