Last Updated:
சிவகாசி பட்டாசு ரகங்கள் தூத்துக்குடி கூட்டுறவு பண்டகசாலையில் ஆஃபர் விலையில் விற்பனை செய்யப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, மக்கள் விறுவிறுப்பாக வண்ண வண்ண புத்தாடைகள், வகைவகையாய் வெடி ஆகியவற்றை வாங்கி வருகின்றனர். பலரும் சிவகாசிக்குச் சென்று வாங்கிவர வேண்டும் என விருப்பப்படுவார்கள்.
ஆனால் தூத்துக்குடியில் அரசு கூட்டுறவு பண்டக சாலையிலேயே சிவகாசியில் தயாராகும் பல வகை வெடிகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்தவகையில் இந்த ஆண்டு வெடிகளின் விலை அதிகரிக்கும் சூழல் நிலவிய நிலையில் மாறாக, பண்டக சாலையில் அரசு சார்பில் விற்பனை செய்யப்படும் வெடிகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. மேலும், பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் கூடுதலாக 5% தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் பெருமளவில் பண்டக சாலைக்கு வந்து வெடிகள் வாங்கி வருகின்றனர்.
இது குறித்து பண்டகசாலை மேலாளர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மக்கள் பாதுகாப்பாகவும் குறைந்த விலையிலும் வெடிகள் வாங்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து தரமான வெடிகள் மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.
பண்டக சாலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் வந்து வாங்கும் வகையில் நன்கு விஸ்தாரமான இடங்களில் வெடிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பார்க்கிங் வசதிகளும் உள்ளன.
அத்துடன், வெடிகளை வாங்கும் போது மக்கள் பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘வெடிகளை வறண்ட இடத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும், சிறுவர்கள் தனியாக வெடிகள் வெடிக்கக் கூடாது. தீயின் அருகில் வெடிகள் வைக்க வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பண்டகசாலையில் வெடிகள் வாங்கிய மக்களும் அரசின் இந்த முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். இந்த வருடம் புதிதாக குழந்தைகளைக் கவரும் வகையில் அவெஞ்சர்ஸ், லெமன் ட்ரீ போன்ற பலவகையில் புதுப்புது வெடி ரகங்கள் வந்துள்ளது.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு, இந்த தீபாவளி பண்டிகையில் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த விலையிலான வெடிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. எங்கள் சார்பில் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
Thoothukkudi,Tamil Nadu
October 14, 2025 10:59 AM IST

