மியூச்சுவல் ஃபண்ட்:
செபியின் புதிய விதிமுறைகளின்படி, மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கான கட்-ஆஃப் நேரங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆஃப்லைனில் பரிவர்த்தனைகள் செய்ய பகல் 3 மணி வரையும், ஆன்லைனில் பணம் பரிவர்த்தனை செய்ய இரவு 7 மணி வரையிலும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்த நேரங்களுக்குப் பிறகு செய்யப்படும் பரிவர்த்தனைகள் அடுத்த வணிக நாளில் செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு:
ஜூன் 1 முதல், கோடக் மஹிந்திரா வங்கி, எரிபொருள், வாடகை, பயன்பாட்டு பில்கள் மற்றும் காப்பீடு போன்ற பிரிவுகளில் வெகுமதிப் புள்ளிகளில் வரம்புகளை அறிமுகப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. மாதாந்திர வரம்பை மீறும் எரிபொருள் செலவுகளுக்கு 1% பரிவர்த்தனை கட்டணம் பொருந்தும். வாடகை மற்றும் கல்வி கொடுப்பனவுகளுக்கும் 1% கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 10 முதல், டாடா நியூ இன்ஃபினிட்டி மற்றும் டாடா நியூ பிளஸ் கார்டுதாரர்களுக்கான லவுஞ்ச் அணுகல் கொள்கையை HDFC வங்கி திருத்தும். செலவினங்களின் அடிப்படையில் வவுச்சர்கள் மூலம் லவுஞ்ச் அணுகல் வழங்கப்படும்.
ஜூன் 20 முதல், ஆக்சிஸ் வங்கி அதன் ரிவார்ட்ஸ் கிரெடிட் கார்டில் படிப்படியாக மாற்றங்களைத் தொடங்கும், இது கேஷ்பேக், வெகுமதிப் புள்ளிகள், லவுஞ்ச் அணுகல் மற்றும் தகுதியான செலவு வகைகளைப் பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இபிஎஃப்ஓ:
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஜூன் மாதத்தில் EPFO 3.0 ஐ அறிமுகப்படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது ATMகள் மற்றும் UPI மூலம் உடனடி PF பணம் எடுப்பதற்கும், UPI செயலிகள் மூலம் இருப்புச் சரிபார்ப்புகளுக்கும், விரைவான கோரிக்கை செயலாக்கத்திற்கும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரிக்கான படிவம் 16:
முதலாளிகள், ஊழியர்களுக்குப் படிவம் 16 ஐ வழங்குவதற்கான கடைசி தேதி ஜூன் 15 என அறிவிக்கப்பட்டது. இந்தச் சான்றிதழ் மூலமாகத் தான் வருமான வரி தாக்கல் செய்ய முடியும் என்பதால், இது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
ஆதார் மாற்றம்:
ஆதார் கார்டுகளில் உள்ள விவரங்களைப் புதுப்பிப்புகளுக்கு ஜூன் 14 கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, ஆதார் கார்டுகளைப் புதுப்பிப்பதற்கு ஆன்லைனில் ரூ.25 கட்டணமாகவும், ஆதார் மையங்களில் ரூ.50 கட்டணமாகவும் வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை மாற்றம்:
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி LPG சிலிண்டர் விலையில் திருத்தங்களை மேற்கொள்ளும். மே மாதத்தில் விலைக் குறைப்பைத் தொடர்ந்து, ஜூன் 1 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்ட சிலிண்டர் விலை என்ன என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
நிரந்தர வைப்பு நிதியில் மாற்றங்கள்:
சூரியோதய் சிறு வங்கி ஜூன் 1 முதல் ரூ.3 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகைகளுக்கு அதன் நிலையான வைப்பு விகிதங்களை 60 அடிப்படைப் புள்ளிகள் வரை குறைக்கும் என அறிவித்துள்ளது.

