Last Updated:
தமிழ்நாட்டில் தங்கும் விடுதிகளில் வரும் 5ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
வணிக சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் தங்கும் விடுதிகளில் வரும் 5ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், மாதந்தோறும் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், நேற்று நாடு முழுவதும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 990.50 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த புதிய விலையின்படி சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 990.50 ரூபாய் உயர்ந்து 3,237 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 14 கிலோ எடை கொண்டவீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே போர் காரணமாக ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனையால் பல ஹோட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையில் தற்போது சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வால் தமிழ்நாட்டில் தங்கும் விடுதிகளில் வரும் 5ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 4 பேர் தங்கும் ஏசி அல்லாத அறைகளுக்கு ரூ.6,500 முதல் ரூ.7,500 வரை கட்டணமும், 3 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 2 பேர் தங்கும் அறைகளுக்கு ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை வசூல் செய்யப்பட உள்ளதாகவும் தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம், கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து எரிவாயு விலை உயர்ந்து கொண்டே இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஒரு சிலிண்டரை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்துவாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மர அடுப்புகளை பயன்படுத்தி தங்களால் முடிந்த அளவுக்கு உணவு அளித்துக் கொண்டிருப்பதாகவும், மரக்கட்டைகளின் விலையும் உயர்ந்துள்ள நிலையில் மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் 4 பேர் தங்கும் ஏசி அறையின் கட்டணம் 6 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 7 ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏசி இல்லாத 3 பேர் தங்கம் அறைக்கான கட்டணம் 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாயாகவும், 2 பேர் தங்கும் அறைக்கான கட்டணம் 8 ஆயிரம் ரூபாய் முதல் 9 ஆயிரம் ரூபாயாகவும் குறைந்தபட்ச தொகை நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருசில விடுதிகளில் அவர்கள் கொடுக்கும் வசதிகளை பொறுத்து இந்த விலை மாறுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

