கிள்ளான்:
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 944 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 943,975 மாணவர்கள் தலா RM150 மதிப்பிலான பள்ளித் தொடக்கக்கால உதவித் தொகையைப் (BAP) பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக அரசாங்கம் மொத்தம் RM141,596,250 நிதியை ஒதுக்கியுள்ளது.
புதிய கல்விச் செஷன் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று முதல் 30 நாட்களுக்குள் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நிதி விநியோகிக்கப்படும் எனச் சிலாங்கூர் கல்வித் துறை இயக்குநர் வான் நூர் ஆஷிகின் அபு காசிம் தெரிவித்தார்.
ஒவ்வொரு மாணவனும் தனது கல்வி ஆண்டைத் தடையின்றித் தொடங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
நிதி மேலாண்மை விதிகளின்படி இந்த உதவித்தொகை முறையாக மாணவர்களுக்குச் சென்றடைவதை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD) உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.எம்.கே மேரு (SMK Meru) பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டு 10 மாவட்டக் கல்வி அலுவலகப் பிரதிநிதிகளிடம் இதற்கான காசோலைகளை வழங்கினார்.
“சிலாங்கூர் பட்ஜெட் 2026-இல் கல்வித் துறைக்காக RM55 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சிலாங்கூர் மாநில வரலாற்றிலேயே கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். மாநிலத்தின் உண்மையான பலம் அதன் மனித வளமே ஆகும். உயர்தரமான மனித ஆற்றலை உருவாக்கக் கல்வித் துறையை வலுப்படுத்துவது அவசியம். பொதுப் பயிற்சி வகுப்புகள் (Tuition) மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய கல்வி முன்னெடுப்புகளையும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது”.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட எஸ்.எம்.கே மேரு பள்ளிக்கு, மந்திரி பெசார் கார்ப்பரேஷன் (MBI Selangor) சார்பில் RM20,000 பேரிடர் நிவாரண நிதியையும் அமிருடின் ஷாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.




