Last Updated:
மாமியார் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்த பெண்ணை வீட்டில் சமைக்க கூட விடாமல் குடைச்சல் கொடுத்ததால் விபரீத முடிவு எடுத்துள்ளார். நடந்தது என்ன?
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் புனீத் குமார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சுஷ்மா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. பொறியியல் பட்டதாரியான சுஷ்மா, திருமணத்தின்போது பெங்களூருவில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். குழந்தை பிறந்த பின்னர், அதை கவனிக்க வேண்டும் என்பதால் வேலைக்குச் செல்வதை நிறுத்தியுள்ளார்.
ஆனால், வீட்டில் இருந்த சுஷ்மாவை, தொட்டதற்கு எல்லாம் அவரது மாமியார் கல்பனா குறை கூறிக்கொண்டே இருந்துள்ளார். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் பெரிய அளவில் பிரச்சினை செய்து வீட்டையே இரண்டாக்கியுள்ளார். இதனால், அடிக்கடி மாமியார் – மருமகள் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இந்த சூழலில் வீட்டில் தனது கணவன் மற்றும் குழந்தைக்கு சமைக்க விடாமல் மாமியார் முட்டுக்கட்டை போட்டுள்ளார். மனதளவில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் இந்த வாழ்க்கையே வேண்டாம் என்ற நிலைக்கு சுஷ்மா தள்ளப்பட்டுள்ளார். இதை அவரது கணவனும் கண்டும் காணாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாமியார் கொடுமை தாங்க முடியாமல், இளம்பெண் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனது மகளின் இந்த முடிவுக்கு அவரது மாமியார் கல்பனாதான் காரணம் என்று, சுஷ்மாவின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் வரதட்சணை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், சுஷ்மாவின் கணவர் புனீத் குமாரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கல்பனாவை பிடிக்க தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளம்பெண் தற்கொலைக்கு குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மாமியார் கொடுமை தாங்க முடியாமல் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
சிறு பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கி சண்டை… மாமியார் சமைக்கவிடாத விரக்தியில், விபரீத முடிவெடுத்த மருமகள்…


