எனினும் வரிச் சலுகைகள் மற்றும் நிலையான வட்டி வருமானம் காரணமாக அரசு ஆதரவு பெற்ற சிறு சேமிப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு பாரம்பரிய விருப்பமான திட்டங்களாகவே இருந்து வருகின்றன. இந்த திட்டங்களில் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரிதி திட்டம் மற்றும் கிசான் விகாஸ் பத்திரம் (KVP) உள்ளிட்டவை அடங்கும்.
எனினும் புதிய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் வரி செலுத்துவோர் இந்தத் திட்டங்களில் செய்யும் முதலீடுகளுக்கு வரி விலக்குகளைப் பெற முடியாது. வரி சேமிப்பு முதலீடுகள் பழைய வரி முறையின் கீழ் மட்டுமே வரி விலக்குகளுக்குத் தகுதி பெறுகின்றன. புதிய வரி விதிப்பை தேர்வு செய்தோர் 80C விலக்கு சலுகைகள் இல்லாத காரணத்தால், தங்கள் விருப்பங்களை மறுபரிசீலனை செய்து, FD போன்ற பிற முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய பரிசீலிக்கிறார்கள். பொதுவாக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் நிலையான வருமானம் காரணமாக FD-க்களில் முதலீடு செய்ய முன்னுரிமை அளிக்கிறார்கள். இருப்பினும் முன்பை போல FD-க்கு கிடைக்கும் வட்டி வருமானம் மிகவும் சிறந்ததாக இல்லை, இது மீண்டும் பல முதலீட்டாளர்களுக்கு ஒரு முக்கிய கவலையாக உள்ளது.
இதனால்தான் வரிச் சலுகைகள் மற்றும் பாதுகாப்பான வருமானம் இரண்டையும் எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு சிறு சேமிப்புத் திட்டங்கள் இன்னும் அதிக பலனளிக்கிறதா என்பதை பரிசீலிப்பது அவசியமாகிறது. அதே நேரம் வரிச் சலுகைகள் இல்லாவிட்டாலும், அரசால் ஆதரிக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான வருமானம் காரணமாக இன்னும் பல முதலீட்டாளர்களுக்கு நம்பகமான முதலீட்டு விருப்பமாகவே உள்ளன. இவை உத்தரவாதமான வருமானத்தை வழங்குகின்றன, மேலும் சில வரிச் சலுகைகளுடன் வருகின்றன, இது அவர்களுக்கு FD-க்களை விட ஒரு நன்மையை அளிக்கிறது.
வட்டி: பல சிறு சேமிப்புத் திட்டங்கள் பெரும்பாலான வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை விட ஒப்பீட்டளவில் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன, அவை பொதுவாக ஆண்டுக்கு 6 முதல் 6.5% வரை வட்டி வருமானத்தை அளிக்கின்றன. ஒப்பிடுகையில், தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் 7.4% வழங்குகிறது, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் 8.2% வழங்குகிறது, கிசான் விகாஸ் பத்ரா 7.5% வழங்குகிறது, பொது வருங்கால வைப்பு நிதி 7.1% வழங்குகிறது மற்றும் சுகன்யா சம்ரிதி 8.2% வட்டி வழங்குகிறது.
வட்டி மீதான வரி: PPf போன்ற சில சிறு சேமிப்புத் திட்டங்கள் கவர்ச்சிகரமான முதலீட்டு விருப்பங்களாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் இதில் ஈட்டப்படும் வட்டி மற்றும் கார்பஸின் ஒட்டுமொத்த முதிர்வு மதிப்புக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்படுகின்றன. இதேபோல், சுகன்யா சம்ரிதி திட்டத்தில் ஈட்டப்படும் வட்டிக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, FD-யில் ஈட்டப்படும் வட்டிக்கு வரி இருப்பதால், இது ஒட்டுமொத்த வருமானத்தை கணிசமாக குறைக்கிறது.
மற்றொரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், சிறு சேமிப்புத் திட்டங்கள் நிதி ஒழுக்கத்தை வளர்க்க உதவுகின்றன. இந்தத் திட்டங்களில் பெரும்பாலானவை நீட்டிக்கப்பட்ட லாக்-இன் பீரியட்களுடன் வருகின்றன. இது முதலீட்டாளர்களை நீண்ட காலத்திற்கு இந்த திட்டங்களில் இருக்க உதவுகிறது. உதாரணமாக, PPF 15 வருட லாக்-இன் பீரியட்டை கொண்டுள்ளது, இது நிலையான, நீண்ட கால முதலீட்டு இலக்குகளை விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதேபோல், NSC ஐந்து வருட லாக்-இன் பீரியட் கொண்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக எதில் முதலீடு செய்வதற்கான முடிவுகள் , இடர் சகிப்புத்தன்மை மற்றும் பணப்புழக்கத் தேவைகளின் அடிப்படையில் தனிப்பட்ட தேர்வாகவே உள்ளது. ஆனால் கிடைக்கும் வட்டி வருமானம், வரிவிதிப்பு விதிகள் மற்றும் அம்சங்களை கவனமாக மதிப்பீடு செய்வது ஒரு முதலீட்டாளருக்கு லாபத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.
December 07, 2025 2:16 PM IST

