(ராமேஸ்வரி ராஜா)
கோலாலம்பூர், ஏப். 8-
கிலிப்பா எனப்படும் கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் சிறுவர், இளையோருக்கான ஒரு நாள் கால்பந்து பயிற்சிப் பட்டறை கடந்த சனிக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது. கோலாலும்பூர் வட்டார தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் தனிச்சை பயிற்றுநர்களும் இந்த பயிற்சிப் பட்டறையில் கலந்து பயனடைந்தனர்.
நாடறிந்த விளையாட்டுத்துறை நிபுணர் முனைவர் அண்ணாதுரை ரங்கநாதன் தலைமையில் பயிற்சியாளர் ஓம் சிவா, பயிற்சியாளர் வினோத் ஆகியோர் பயிற்சியை சிறப்பாக வழிநடத்தினர்.
பட்டறையை நிறைவுசெய்து பேசிய கோலாலும்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவரும் மீஃபாவின் உதவித் தலைவருமாகிய டத்தோ வீரமணி செல்வம் இதுபோன்ற பட்டறைகள் தலைநகரின் மற்ற பகுதியிலும் கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் விரைவில் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கிடையிலான 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியும் ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். இறுதியில் பட்டறையில் கலந்துகொண்ட அனைவருக்கும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.