அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, “வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு” அமைப்பினால் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள், அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக!”, “பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்!”, “மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்க வேண்டாம்!” மற்றும் “பாலியல் வன்கொடுமையாளர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது!” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர்.
வாலகிருஸ்ணா














