Last Updated:
அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்தி சிறு சிறு பேமென்ட்களை செலுத்துவதால் ஒரு சில நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகின்றன.
முன்பெல்லாம் வெளியில் செல்லும்போது கட்டாயமாக கையில் பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் அனைத்தும் கேஷ்லெஸ் பேமென்ட் ஆகிவிட்டது. ஃபிளைட் புக்கிங் முதல் ஒரு கப் காபி குடிப்பதாக இருக்கட்டும், எல்லாவற்றிற்குமே ஆன்லைன் பேமென்ட் செய்யப்படுகிறது. ஆனால், சிறு சிறு பேமென்டுகளுக்கு உங்களுடைய கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது நல்ல யோசனையாக இருக்குமா?
உதாரணமாக, 100 ரூபாய்க்கும் குறைவான பேமென்டுகளுக்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வது நல்லதா என்று சிலர் யோசிக்கலாம். மேலோட்டமாக பார்க்கும்போது இதனால் என்ன தீங்கு ஏற்பட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அடிக்கடி கிரெடிட் கார்டு பயன்படுத்தி சிறு சிறு பேமென்ட்களை செலுத்துவதால் ஒரு சில நன்மைகள் மற்றும் தீமைகள் ஏற்படுகின்றன.
நன்மைகள்:
எந்த ஒரு தொகையாக இருந்தாலும் சரி, கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி உங்களுக்கு கிடைக்கக்கூடிய முக்கியமான பலன்களில் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ்பேக் அடங்கும். ஒவ்வொரு டிரான்ஸாக்ஷனுக்கும் ரிவார்டுகளைப் பெறுவீர்கள். அடிக்கடி செலவு செய்யும் நபர்களுக்கு அதிக ரிவார்டுகளை சில கார்டுகள் கொடுக்கின்றன. அது தவிர கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதால் உங்களுடைய செலவுகளுக்கு ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு கிடைக்கிறது.
பட்ஜெட்டை அமைப்பதற்கு இது உதவியாக இருக்கும். பொருளாதாரத்தைப் பொறுப்புடன் கையாளுபவர்களுக்கு இது ஒரு நல்ல ஆப்ஷனாக அமைகிறது. மற்றொன்று கார்டை பயன்படுத்துவது ஒரு கூடுதல் பாதுகாப்பு அடுக்கை சேர்க்கிறது. ஏனெனில், பணத்தை எடுத்துப் போகும்போது அது திருடு போவதற்கோ அல்லது தொலைந்து போவதற்கோ வாய்ப்புகள் உள்ளன.
தீமைகள்:
என்னதான் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால், ஒரு சில நன்மைகள் இருந்தாலும் சிறு சிறு பேமென்டுகளுக்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வதால் உண்மையில் சில பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. முதலில் நீங்கள் அளவுக்கு அதிகமாக பரிவர்த்தனைகளை செய்யும்போது உங்களுடைய மொத்த செலவுகளை கண்காணிப்பது சற்று கடினமாக மாறுகிறது. ஒரு மாதத்தின் இறுதியில் எக்கச்சக்கமான பேமென்ட்கள் அடங்கிய ஒரு பில்லை நீங்கள் பார்ப்பீர்கள். மேலும் உங்களுடைய கிரெடிட் கார்டுக்கு வழங்கப்பட்ட மொத்த உச்சவரம்பை விட நீங்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்துவிட்டால் அது உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்தை பாதிக்கலாம்.
எனினும், உங்களுடைய பேலன்ஸை நீங்கள் வழக்கமான முறையில் செலுத்திவரும் பட்சத்தில் இது பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. மற்றொன்று வியாபாரிகள் விதிக்கும் கூடுதல் கட்டணங்கள். குறைந்த மதிப்பு கொண்ட கிரெடிட் கார்டு பேமென்ட்களுக்கு சில சிறிய வியாபாரிகள் கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறார்கள். ஆகவே, இது போன்ற பேமெண்டுகளுக்கு நீங்கள் கேஷ் அல்லது UPI முறையை பயன்படுத்தலாம்.
எனவே, சிறிய அளவிலான பேமென்டுகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமா? இதற்கான பதில் என்பது உங்களுடைய செலவு செய்யும் பழக்கம் மற்றும் பணத்தை நீங்கள் கையாளும் விதத்தில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு மாதமும் முழு கிரெடிட் கார்டு பில்லையும் நீங்கள் செலுத்தி, உங்களுக்கு கிடைத்த ரிவார்டுகளை முறையாக பயன்படுத்தும் ஒரு நபர் என்றால் சிறிய பேமென்ட்களுக்கு கூட நீங்கள் தாராளமாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தலாம்.
ஆனால், நீங்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்பவர், டியூ தேதிகளை மறந்து விடுபவர் அல்லது அடிக்கடி கடன் சிக்கலில் மாட்டிக் கொள்பவர் என்றால் திட்டமில்லாமல் உங்களுடைய கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவது நல்ல யோசனையாக இருக்காது. இறுதியில் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி சிறு பேமென்ட்களை செய்வதற்கு ஒரு சிறிய திட்டமிடல் தேவைப்படுகிறது என்று முடித்துக் கொள்ளலாம்.


