Last Updated:
உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளன.
உத்தரப்பிரதேசத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை செய்து, அதை வீடியோ எடுத்து விற்பனை செய்த தம்பதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதி வழங்கிய பரபரப்பு தீர்ப்பின் முழு விவரம் இதோ.
18 வயதுக்கும் குறைவான சிறுவர், சிறுமிகளை மிரட்டி, அவர்களை பாலியல் ரீதியாக வீடியோ எடுத்து, அதை டார்க் வெப்சைட்டுகளுக்கு விற்றுள்ளனர். அரசு ஊழியரும், அவரது மனைவியும் சேர்ந்து தம்பதியாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டம் நரேனி பகுதியை சேர்ந்தவர் ராம்பவன். இவரது மனைவி துர்காவதி. உத்தரப்பிரதேசம் நீர் பாசனத்துறையின் இளநிலை பொறியாளராக பணியாற்றுபவர் ராம்பவன். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவியுள்ளன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள், ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதியை கைது செய்தனர்.
சிபிஐ நடத்திய விசாரணையில் பாண்டா, ஹமீர்பூர், சித்ரகூட் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக உறுதியான தகவல் கிடைத்தது. சிறார்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஆபாசமாக எடுத்து இணையத்தில் பரப்பியதும் தெரியவந்தது. அந்த வீடியோக்கள் பென்டிரைவ் மூலமும் பலருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் 34 வீடியோக்களும், 679 புகைப்படங்களும் இருந்ததை சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ராம்பவன் மற்றும் அவரது கூட்டாளிகள் டார்க் வெப் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிறார்கள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் மற்றும் வீடியோக்களை விற்றுள்ளனர்.
இந்த வழக்கில்தான் ராம்பவன் மற்றும் அவரது மனைவி துர்காவதிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இந்த வழக்கில் 74 சாட்சிகள் ஆஜராகி சாட்சி கூறியுள்ளனர். இதில், 25 பேர் பாதிக்கப்பட்ட சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பு போக்ஸோ நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தனது 163 பக்க தீர்ப்பில் இந்த அருவருப்பான குற்றம் குறித்து கடுமையான கருத்துகளையும் பதிவு செய்துள்ளார். தண்டனையுடன், குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையில், சாட்சி அளித்த ஒவ்வொரு பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் 10 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
ராம்பவன் மற்றும் துர்காவதி ஜாமினில் வெளியே சுற்றி வந்துகொண்டிருந்த நிலையில், இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குற்றவாளிகள் 3 செல்போன்களைப் பயன்படுத்தி டார்க் வெப் வழியாக சிறார்களின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளிநாடுகளில் விற்றிருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின்னரே, சிபிஐ இந்த விவகாரத்தில் தலையிட்டு வழக்குப்பதிவு செய்து, கணவன் – மனைவி இருவருக்கும் தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளது.
சிறார்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுபோன்ற கடுமையான தண்டனைகள் அவசியம் தேவைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறார்களிடம் பாலியல் குற்றம்… டார்க் வெப்பில் வீடியோ விற்பனை… கணவன்-மனைவிக்கு தூக்கு தண்டனை…


