பிகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை மேற்கொண்டது. இதில், குடிபெயர்ந்தவர்கள், இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டையை வைத்திருந்தவர்கள், இறந்தவர்கள் என சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது.
இந்த நடவடிக்கைக்கு பிறகு வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. உதாரணத்திற்கு இளம் பெண்ணிற்கு 124 வயது என பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோல், இறந்ததாக கூறி இருவரை தேர்தல் ஆணையம் நீக்கியது. அவர்கள் இருவரையும் செயற்பாட்டாளர் யோகேந்திர யாதவ், உச்சநீதிமன்ற விசாரணையின் போது ஆஜர்படுத்தினார்.
மேலும், இறந்தவர்கள் என கூறி தேர்தல் ஆணையம் நீக்கிய 7 நபர்களை அழைத்து அவர்களுடன் தேநீர் அருந்தி, கலந்துரையாடினார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இதனிடையே, வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், வானொலி, பஞ்சாயத்து அலுவலக அறிவிப்பு பலகை உள்ளிட்ட தளங்களிலும் பட்டியலை காட்சிப்படுத்த நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், பட்டியலில் இருந்து பெயர் நீக்கத்திற்கான காரணத்தையும் குறிப்பிட வேண்டுமெனவும் கூறினர்.
அப்போது, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்களின் உரிமைகள் அரசியல் கட்சிகளைச் சார்ந்து இருப்பதை விரும்பவில்லை என்று கூறினர். எனினும், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் திருத்த நடவடிக்கையை நீதிபதிகள் வெகுவாக பாராட்டினர்.
August 14, 2025 9:04 PM IST
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்… தேர்தல் ஆணையத்திற்கு ஐந்து நாள் கெடு விதித்த உச்சநீதிமன்றம்

