
Last Updated:
மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த மன்மோகன் சிங் மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.
இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரை இழந்த விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் இரவு 9.51 மணியளவில் பிரிந்தது. 92 வயதான மன்மோகன் சிங்கிற்கு திடீர் உடல் நலக்குறைவு இன்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் இரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரியங்கா காந்தி வதேரா உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சிகிச்சை தொடர்ந்த நிலையில், மருத்துவர்களால் மன்மோகன் சிங்கின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
இந்நிலையில் இரவு 9.51 மணியளவில் மன்மோகன் சிங் உயிரிழந்தார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த 1991-96 இல் நிதியமைச்சராக திறமையாக செயல்பட்ட மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பிரதமராக கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை இரண்டு முறை ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.
மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பால் துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கிறது. மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்த மன்மோகன் சிங் மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார்.
India mourns the loss of one of its most distinguished leaders, Dr. Manmohan Singh Ji. Rising from humble origins, he rose to become a respected economist. He served in various government positions as well, including as Finance Minister, leaving a strong imprint on our economic… pic.twitter.com/clW00Yv6oP
— Narendra Modi (@narendramodi) December 26, 2024
அவர் நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசு பதவிகளிலும் பணியாற்றி பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். பாராளுமன்றத்தில் அவரது செயல்பாடுகள் புத்திசாலித்தனமாக இருந்தன. இந்தியாவின் பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
.
December 26, 2024 11:32 PM IST
Manmohan Singh : ‘சிறந்த தலைவர்களில் ஒருவரை இந்தியா இழந்து விட்டது’ – மன்மோகன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

