Last Updated:
இந்தியாவில் பல பிராந்தியங்களில் வலுவான கால்பந்தாட்ட கலாச்சாரம் உள்ளது. எங்களது மகளிர் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இரு அணி அணிகளில் எது வலிமையானது என்பதை போட்டி முடிவுகள் தெரிவிக்கின்றன என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பாஸ்காஸ்டரும், செயற்கை நுண்ணறிவு ஆய்வாளருமான (AI) லெக்ஸ் பிரிட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார். அவரிடம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது-
“விளையாட்டு உலகத்திற்கு எனர்ஜியை கொடுக்கும் திறனை கொண்டிருப்பதாக கருதுகிறேன். விளையாட்டு பல்வேறு நாட்டு மக்களை ஒருங்கிணைக்கிறது. எனவே தான் விளையாட்டு ஒவ்வொரு முறையும் மேம்பாடு அடைய வேண்டும் என விரும்புகிறேன்.
மனித குலத்தின் பரிணாம வளர்ச்சியில் விளையாட்டு முக்கிய பங்கை வகைத்து இருக்கிறது. அது வெறுமனே போட்டிகள் கிடையாது. அது மக்களை ஆழமாக இணைக்க கூடிய ஒரு சாதனம். இப்போது கேள்விக்கு வருகிறேன். இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளில் எது சிறந்த அணி என்று நீங்கள் கேட்டீர்கள். டெக்னிக் என்ற அளவில் எனக்கு பெரிய அளவில் நிபுணத்துவம் கிடையாது. அது பற்றி அந்த துறை சார்ந்தவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும்.
விளையாட்டுத்துறை நிபுணர்கள் தான் இந்தியா அல்லது பாகிஸ்தானில் எது சிறந்த அணி, எந்த அணியில் சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர் என்பதை சொல்ல முடியும். ஆனால் சில சில நேரங்களில் போட்டியின் முடிவுகள் யார் சிறந்தவர்கள் என்பதை காண்பித்து விடுகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய போட்டி நடைபெற்றது. அதன் முடிவில் யார் சிறந்த அணி என்பது தெரிய வந்தது. அப்படித்தான் நாங்கள் எந்த அணி சிறந்தது என்பதை தெரிந்து கொள்கிறோம்” என்று தெரிவித்தார்.
அவரிடம் 1980களில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என்பது குறித்து லெக்ஸ் பிரிட்மேன் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில், “இந்தியாவில் பல பிராந்தியங்களில் வலுவான கால்பந்தாட்ட கலாச்சாரம் உள்ளது. எங்களது மகளிர் அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. இந்திய ஆண்கள் கால்பந்தாட்ட அணி நல்லதொரு வளர்ச்சியை கண்டு வருகிறது.
கடந்த காலத்தைப் பற்றி பேசுவோம் என்றால், 1980களில் டிகோ மாரடோனா என்ற பெயர் மட்டும்தான் உலகம் முழுவதும் பரவி இருந்தது. அந்த தலைமுறை மக்களுக்கு அவர் கதாநாயகனாக இருந்தார். இன்றைய தலைமுறையில் சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்று நீங்கள் கேட்டால், இந்த தலைமுறையினர் லியோனல் மெஸ்ஸி என்று பதில் சொல்கிறார்கள்” என்று கூறினார்.
இதையும் படிங்க – ‘சிறுவயதிலிருந்தே ஷூ அணிந்தது கிடையாது’… ஏழ்மை காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
March 16, 2025 11:19 PM IST


