கோலாலம்பூர்:
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சிரம்பான்-போர்ட்டிக்சன் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தொன்றில், புரோட்டான் சாகா ரகக் கார் மோதித் தப்பியோடியதில் தொழிற்கல்வி (TVET) கல்லூரி மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (அக்டோபர் 04) அதிகாலை 4.45 மணியளவில் போர்ட்டிக்சனில் இருந்து மலாக்கா நோக்கி யாமாஹா மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நெடுஞ்சாலையின் இடதுபுறப் பாதையில் பயணித்துக்கொண்டிருந்த மாணவரின் மோட்டார் சைக்கிளைப் பின்னாலிருந்து அதிவேகமாக வந்த பழுப்பு நிறப் புரோட்டான் சாகா கார் மோதித் தள்ளியுள்ளது.
காரின் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு நெடுஞ்சாலைக்கு அருகிலிருந்த வடிகாலுக்குள் விழுந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் நடவடிக்கைகளைச் சிரம்பான் மாவட்ட போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.



