சிரம்பான்:
நேற்றிரவு இங்கு பெய்த கனமழையைத் தொடர்ந்து, கட்டுமான நிலையில் இருந்த வேலி சுவர் ஒன்று திடீரென இடிந்து விழுந்ததில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்கள் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கிப் பலத்த சேதமடைந்தன.
இன்று அதிகாலை சுமார் 3.00 மணியளவில் 43 வயதான வி. தியாகராஜன் என்பவரின் வீட்டின் பக்கவாட்டில் கட்டப்பட்டு வந்த வேலி சுவரிலேயே இத்தீடீர் இடிபாடு ஏற்பட்டது.
சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில், கான்கிரீட் கற்களும் மண்ணும் சாலையில் சிதறியதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த அண்டை வீட்டாரின் டொயோட்டா வியோஸ் (Toyota Vios), பெரோடுவா விவா (Perodua Viva) மற்றும் புரோட்டான் பெர்சோனா (Proton Persona) ஆகிய 3 கார்களின் மீதும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தின.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இச்சுவர் கட்டும் பணி தொடங்கியதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் பணி நிறைவடைய இருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளதாகவும் வீட்டின் உரிமையாளர் தியாகராஜன் கவலையுடன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்துச் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.கனமழை மற்றும் மண்ணில் ஏற்பட்ட நில அசைவு காரணமாகவே சுவர் இடிந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இடிந்த சுவரை மீண்டும் முழுமையாகக் கட்டித் தருவதாகவும், சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப் பொறுப்பேற்பதாகவும் அந்த ஒப்பந்ததாரர் உறுதியளித்துள்ளார்.
நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்விதப் காயங்களும் ஏற்படவில்லை.



