Last Updated:
இந்த சீசனைப் பொறுத்தவரை சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.3க்கு தான் செல்கின்றன. கடந்த சீசனில் கிலோ ரூ.13க்கு விற்பனையானது.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி, அரூர், என்.புதுப்பட்டி, மோகனூர், எருமப்பட்டி, பவித்திரம் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. சின்ன வெங்காயம் மூன்று மாத கால பயிர் என்பதால் விவசாயிகள் வெயில், மழை என்று பாராமல் மிகவும் சிரமப்பட்டு தான் இந்த சின்ன வெங்காயத்தை விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் போதிய விலை கிடைக்காமல் விவசாய நிலங்களில் விவசாயிகள் பட்டறை அமைத்து அதில் டன் கணக்கில் சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளனர். போதிய விலை கிடைக்காமல் பட்டறையில் சேமித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயங்கள் 3 மாதங்கள் மட்டுமே தாக்குப்பிடிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி ரவீந்திரன் கூறுகையில், “2000 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை முடிக்கப்பட்டு, சின்ன வெங்காயத்தை பட்டறையில் வைத்துள்ளோம். இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் புவிசார் குறியீடு பெறத்தக்க சிறப்பு வாய்ந்த ஒன்றாகவும் விளங்குகிறது. விவசாயிகள் மிகுந்த சிரமத்துடன் தான் சின்ன வெங்காயத்தை விவசாயம் செய்து வருகின்றனர்.
சின்ன வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு விவசாயத்தைப் பொறுத்தவரை மறைமுகமாக அரசுக்கு வருவாய் வரக்கூடியது. தற்போது சின்ன வெங்காயம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாகின்றனர்.
இந்த சீசனைப் பொறுத்தவரை சின்ன வெங்காயம் கிலோவிற்கு ரூ.3க்கு தான் செல்கின்றன. கடந்த சீசனில் கிலோ ரூ.13க்கு விற்பனையானது. விலை குறைவாக இருப்பதால் சின்ன வெங்காயத்தின் நஷ்டத்தைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகள் மிகுந்த மனவேதனையடைந்து விவசாய நிலத்தில் பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்துள்ளோம்.
அரசாங்கத்திற்கு மறைமுகமாக வரியின் மூலம் வருவாய் கிடைக்கும் என்பதால் விலை வீழ்ச்சியடையும் போது விவசாயிகள், உழவர்கள் பயன்பெறும் வகையில் அரசாங்கமே பசுமைக் குடில் அமைத்து குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திட வேண்டும்.
மேலும் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து அரசே விற்பனை செய்திட வேண்டும். மேலும் உணவுப் பொருட்களை பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக்குவது, அதனை விற்பனை செய்வது குறித்த பயிற்சிகளை விவசாயிகளுக்கு மானியத்துடன் கடனுதவி அளித்து ஊக்குவித்தால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.
காலம்காலமாக விவசாயம் செய்து வருகின்றோம். குறிப்பாக சின்ன வெங்காயம் தான் அதிக அளவில் பயிர் சாகுபடி செய்துள்ளோம். தற்போது சின்ன வெங்காயம் விலை இல்லாததால் கடும் சிரமமான சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
ஏற்கனவே ஆட்களுக்கான கூலி, உழவுக் கூலி, உரம் என ஒரு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். ஆட்களுக்கான கூலியே ரூ.400 ஆகிறது. விலை கட்டுப்படியாகாததால் சின்ன வெங்காயத்தை பட்டறை போட்டு வைத்துள்ளோம். வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் சின்ன வெங்காயத்தை கொடுக்காமல் வளையப்பட்டி, அரூர், எருமப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதியில் 100 டன் சின்ன வெங்காயத்தை பட்டறை போட்டு வைத்துள்ளோம்.
இந்த சின்ன வெங்காயங்கள் சுமார் 3 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும். அப்போதும், போதிய விலை இல்லையென்றால் சின்ன வெங்காயம் காய்ந்து வீணாகும். அதன் பிறகு குப்பைக்கு தான் செல்லும்” என வேதனையுடன் விவசாயிகள் கூறினர்.
Namakkal,Tamil Nadu

