இந்த இலக்கை அடைய, இந்தியாவிற்கு எத்தனை சேமிப்பு அணைகள் (storage dams) சரியாக தேவைப்படும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்த கேளிவிக்கான பதிலை இந்தியா டுடேயின் ஓப்பன்-சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) குழுவின் பகுப்பாய்வு அளித்துள்ளது. இதன்படி சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீரைச் சேமிக்க, சிந்து நதி நீர் ஒப்பந்தம் IWT ஆல் நிர்வகிக்கப்படும் ஆறுகளின் மீது உள்ள மிகப்பெரிய அணையான பக்ரா நங்கல் அணை அளவிற்கு குறைந்தது 22 அணைகள் இந்தியாவிற்கு தேவைப்படும் என்று தெரிகிறது.
கிழக்கு நதிகள் (சட்லெஜ், பியாஸ் மற்றும் ரவி) மீது இந்தியாவிற்கும், ஒட்டுமொத்தமாக மேற்கு நதிகள் என அழைக்கப்படும் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகள் மீது பாகிஸ்தானுக்கும் பிரத்தியேக உரிமைகளை IWT ஒப்பந்தம் வழங்குகிறது. அரசு பதிவுகளின்படி, சராசரியாக ஆண்டுக்கு 136 MAF (மில்லியன் ஏக்கர்-அடி) நீர் மேற்கு ஆறுகள் வழியாக பாய்கிறது. புரியும்படி சொல்வதென்றால் 1 MAF நீர் என்பது10 லட்சம் ஏக்கர் நிலத்தை 1 அடி ஆழமான நீரில் அல்லது மூன்று டெல்லி-NCR களுக்கு சமமான பரப்பளவை மூழ்கடிக்க கூடியது. மேற்கு ஆறுகள் வழியாகப் பாயும் நீர் முழுவதையும் நிறுத்தினால், 42241 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள ஜம்மு காஷ்மீர் முழுவதையும் 13 அடி தண்ணீருக்குக் கீழே அது உள்ளடக்கும்.
எனவே இந்த நீரைத் தக்க வைத்துக்கொள்ள சிறந்த வழி, வறண்ட காலங்களில் விவசாயம் மற்றும் மின்சார உற்பத்திக்கு நீரைப் பயன்படுத்த சேமிப்பு அணைகளைக் கட்டுவதாகும். ஆனால் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு பிரத்யேக உரிமைகள் கொண்ட மேற்கு ஆறுகளில் இந்தியா சேமிப்பு அணைகளைக் கட்ட அனுமதிக்கவில்லை. எனவே, இந்த ஆறுகளில் எதிலும் தற்போது ஒரு சேமிப்பு அணை கூட இல்லை. “run-of-the-river” ப்ராஜக்ட் நீர்த்தேக்கங்களில் கூட, இந்தியா 3.6 MAF க்கும் அதிகமான தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாது.
இந்த நிலையில் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் நதியின் துணை நதியில் இந்தியா கட்டும் முதல் சேமிப்பு அணை மூலம் 125.4 மில்லியன் கன மீட்டர் அல்லது 0.1 MAF தண்ணீரை மட்டுமே சேமிக்க முடியும். தற்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள நீர்த்தேக்கங்கள் சிந்து, செனாப் மற்றும் ஜீலம் நதிகளின் வருடாந்திர நீரோட்டத்தில் 1% கூட தேக்கி வைக்க கூடிய திறனை கொண்டிருக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் மேற்கு ஆறுகளில் ஆறு செயல்பாட்டு நீர்மின் திட்டங்கள் உள்ளன. அவற்றில் எதுவும் “சேமிப்பு” அணைகள் என வகைப்படுத்தப்படவில்லை. மொத்தமாக சலால், கிஷன்கங்கா, பாக்லிஹார், உரி, துல்ஹஸ்தி மற்றும் நிமூ பாஸ்கோ அணை நீர்த்தேக்கங்கள் இந்த ஆறுகளில் பாயும் நீரில் ஒரு வருடத்தில் 0.4 சதவீதத்தை மட்டுமே வைத்திருக்க முடியும். ஜம்மு-காஷ்மீரில் கட்டுமானத்தில் உள்ள அனைத்து நீர்மின் திட்டங்களும் நிறைவடையும் போது இந்த கொள்ளளவு 2ஆகி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரட்லே, பகல் துல், குவார் மற்றும் கிரு நீர்மின் திட்டங்கள் தற்போது கட்டுமானத்தில் உள்ளன. இவற்றின் கட்டுமானம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களுக்குள் நிறைவடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே கிழக்கு ஆறுகளில் கட்டப்பட்ட ஏழு பெரிய அணைகள், ஒவ்வொரு ஆண்டும் ரவி, பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளில் பாயும் நீரில் 50 சதவீதம் வரை சேமிக்கும் திறன் கொண்டவை என்று தரவுகள் காட்டுகின்றன. இந்தியா வெள்ள எச்சரிக்கையை நிறுத்தினாலோ அல்லது உச்ச பருவமழை காலத்தில் பக்ரா அணையின் மதகுகளை திறக்க முடிவு செய்தாலோ விவசாய பாதிப்புகள் ஏற்படலாம்.
பாகிஸ்தானிற்கான தண்ணீர் பாய்ச்சலை நிறுத்துவது நமது நலன் சார்ந்ததா?
மேற்கு நதிகளில் அணைகள் கட்டுவது பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் செலவை ஏற்படுத்துகிறது, மேலும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீரில் பேரழிவுகள் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேற்கு ஆறுகளில் எந்தவொரு பெரிய நீர் சேமிப்பு அணைகளையும் கட்டதிட்டமிடும் முன் அது நமது மக்களுக்கும், நமது நிலப்பரப்புக்கும், நமது எதிர்காலத்திற்கும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேற்கு ஆறுகளில் சேமிப்பு அணைகளை கட்ட பொருத்தமான இடங்கள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை தகுந்த இடம் அடையாளம் காணப்பட்டால், புவியியல் இருப்பிடம் காரணமாக முதலில் முன்னுரிமை அளிக்கப்படும் நதி செனாப் ஆக இருக்கலாம். இந்த பகுதியில் ஏற்கனவே கட்டுமானத்தில் உள்ள மற்றும் திட்டமிடப்பட்ட ப்ராஜக்ட்டுகள் அதிகம் உள்ளது. நிலச்சரிவுகள், வெள்ளம், நில அதிர்வு செயல்பாடு மற்றும் பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளம் ஆகியவற்றின் முக்கிய அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரித்து வரும் இடமும் இதுதான் என்று நிபுணர் ஹிமான்ஷு தக்கர் குறிப்பிட்டுள்ளார். சுருக்கமாக சொன்னால் சிந்து, செனாப் & ஜீலம் நதிகளில் தண்ணீரை சேமிக்க அணைகள் கட்டுவது ஒரு இமாலய முயற்சி என்கிறார்கள் நிபுணர்கள்.

