கோலாலம்பூர்:
மலேசியாவின் கலை, கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய உணவுகளை உலகிற்குப் பறைசாற்றும் ‘சித்ராவர்ணா 2026’ (Citrawarna 2026) பெருவிழாவை முன்னிட்டு, கோலாலம்பூரின் முக்கியச் சாலையான ஜாலான் ராஜா சாலை அடுத்த வாரம் முதல் சுமார் 6 நாட்களுக்கு முழுமையாக மூடப்படவுள்ளதாக மலேசிய சுற்றுலாத்துறை (Tourism Malaysia) இன்று அறிவித்துள்ளது.
‘விசிட் மலேசியா 2026’ (Visit Malaysia 2026) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வரலாற்றுச் சிறப்புமிக்க மெர்டேக்கா சதுக்கத்தில் (Dataran Merdeka) வரும் ஜூலை 24 முதல் 26 வரை இந்த சித்ராவர்ணா திருவிழா நடைபெறவுள்ளது.
இதற்கான மேடை அமைப்புகள், விழா ஏற்பாடுகள் மற்றும் விழா முடிந்த பின்னர் அவற்றை அகற்றும் பணிகளுக்காக, ஜூலை 21-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஜூலை 27-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை மெர்டேகா சதுக்கத்தின் முன்பாக உள்ள ஜாலான் ராஜா சாலை முழுமையாக மூடப்பட்டிருக்கும்.
சித்ராவர்ணா விழாவின் முக்கிய அங்கமான ‘வண்ணங்களின் பேரணி’ (Colours of Parade) மற்றும் அதன் ஒத்திகையின் போது போக்குவரத்து கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளன.
பேரணி நடைபெறும் வழித்தடங்களில் உள்ள சாலைகள் பின்வரும் நேரங்களில் மூடப்படும்: ஒத்திகை நாளான (ஜூலை 24) அன்று இரவு 9:00 மணி முதல் அதிகாலை 2:00 மணி வரை, அதிகாரப்பூர்வ பேரணி நாளான (ஜூலை 25) அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 11:00 மணி வரையான காலப்பகுதியில் சாலைகள் மூடப்படும் என்றும் கூறப்படுகிறது.



