யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் வைத்தியசாலைகளில் இறந்தவர்களை புதைப்பதில்லை என வைத்தியசாலை தரப்பினர் கூறியுள்ளதாகவும் இந்த மயானத்தில் சடலங்கள் புதைக்கப்பட்டதற்கு இந்த மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை எனவும் என சட்டத்தரணி வி.எஸ் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 41 ஆவது நாளான நேற்று (23) முன்னெடுக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது ஒரு இந்து மயானம். இதில் சட்டரீதியான புதைத்தலும் நடைபெறலாம். சிறுவர்கள் என்றால், அனுமதி எடுத்து அடக்கம் செய்யப்படும்.
சவப்பெட்டிகளோடு காணப்பட்டது
ஆனால் இங்கு அதிகமான என்புக்கூடுகளை பார்க்கும்போது இது ஒரு குற்றம் நடந்தது, அவசரமாக புதைக்கப்பட்டது என எங்கள் சாதாரண கண்களுக்குத் தெரிகின்றது.
இது சம்பந்தமாக அறிக்கைகள் வந்த பிற்பாடுதான். அது தொடர்பில் மேலதிகமாக சொல்லக்கூடியதாக இருக்கும்.

இங்கு மீட்கப்பட்ட சில மனித என்புகள் சட்டரீதியாக புதைக்கப்பட்டதற்கான ஆடைகளோடு, சவப்பெட்டிகளோடு காணப்பட்டது. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனை சான்றுகளும் காணப்பட்டன.
ஆனால் அவைகள் இங்கு புதைக்கப்பட்டதற்கு இந்த இந்து மயான சபையினரிடம் பதிவுகள் இல்லை.
அதேநேரம் வைத்தியசாலையை அணுகிய போது, அவர்களும் இந்த இந்து மயானத்தில் சடலங்களை புதைக்கவில்லை என்றும், தாங்கள் கோம்பயன்மணல் மயானத்தையே பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்கள்.
எனவே செம்மணி புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கைகள் வந்த பின்னரே தெளிவாக கூற முடியும் என“ தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

