கோலாலம்பூர்:
மலேசியத் தேசியப் பதிவுத் துறையின் (JPN) தலைமை இயக்குநர் பத்ருல் ஹிஷாம் அலியாஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியக் குடியுரிமையைத் துறந்தவர்களில் சுமார் 93.78 சதவீதத்தினர் சிங்கப்பூரைத் தங்கள் புதிய தாயகமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020 – 2025 டிசம்பர் 17 வரை) மொத்தம் 61,116 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். அதில் சுமார் 57,314 பேர் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றுள்ளனர்.
சராசரியாக ஆண்டுக்கு 10,000 மலேசியர்கள் தங்கள் குடியுரிமையை விட்டு வேறு நாட்டில் குடியுரிமை பெறுகின்றனர். இதில் முதலாவதாக சிங்கப்பூரும் அடுத்தபடியாக ஆஸ்திரேலியா (2.15%), புரூணை (0.97%) ஆகிய நாடுகளுக்கு மலேசியர்கள் அதிகம் செல்கின்றனர்.
குடியுரிமையைத் துறந்தவர்களில் பெண்களே பெரும்பான்மையினராக உள்ளனர் (சுமார் 35,356 பேர்) என்றும், 21 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இந்த முடிவை அதிகம் எடுக்கின்றனர்.
குடியுரிமை மாற்றத்திற்கான காரணங்கள் எனும் ரீதியில், சிங்கப்பூரின் வலுவான கரன்சி (SGD), அதிக ஊதியம் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகள் போன்றவை மலேசியத் திறனாளர்களை (Brain Drain) ஈர்க்கின்றன.
மேலும் சிங்கப்பூரர்களைத் திருமணம் செய்துகொள்வது அல்லது குடும்பத்துடன் அங்கு நிலைபெறுவது மற்றொரு முக்கியக் காரணமாகும்.
மலேசிய மற்றும் சிங்கப்பூர் சட்டங்களின்படி, ஒருவர் இரு நாடுகளின் குடியுரிமையையும் வைத்திருக்க முடியாது. எனவே, அங்கு நிரந்தரமாக வாழ விரும்புவோர் மலேசியக் குடியுரிமையைக் கைவிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




