Singapore: சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெளிநாட்டவர்கள் 3 பேர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
சிறிய படகு மூலமாக சட்டவிரோதமாக சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் நுழைந்த அவர்களை கடலோர காவல்படை (PCG) விசாரிக்க முயன்றபோது அவர்கள் தப்பிக்க முயன்றனர்.
அதன் பின்னர் அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று (ஏப்ரல் 18) நடந்ததாகவும், அவர்கள் மூன்று பேரும் மலேசிய நாட்டை சேர்ந்த ஆடவர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது, ஏப்ரல் 18 அன்று பிற்பகல் 2:05 மணியளவில், Pulau Sarimbun அருகே உள்ள கடல் பகுதியில் PCG அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அடையாளம் இல்லாத சாம்பன் படகை அவர்கள் கண்டனர்.
பின்னர் சோதனையிட அருகில் நெருங்கியபோது அவர்கள் அங்கிருந்து மலேசியா நோக்கி வேகமாக தப்பிக்க முயன்றனர்.
அவர்களை துரத்தி பிடிக்கும் இந்த முயற்சியில் PCG அதிகாரி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அவர்கள் 28 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், சிங்கப்பூர் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சாம்பன் படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

