சிங்கப்பூரில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருந்த முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உணவு விநியோக நிறுவனங்களை நடத்தி வந்த தம்பதியினருக்கு நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 25) தலா S$72,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி
ராயல் கியூசின் குரூப் (Royal Cuisine Group), யான்சி (Yanxi) மற்றும் ஹெல்தி மீல்ஸ் கேட்டரிங் (Healthy Meals Catering) ஆகிய மூன்று நிறுவனங்கள் அவர்களால் நடத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை மொத்தம் 103 ஊழியர்கள் சம்பளம் தொடர்பாக பாதிக்கப்பட்டனர் என கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு சுமார் S$432,000 சம்பள பாக்கி நிலுவையில் இருந்தது, ஆனால் அவர்களுக்கு S$73,000 மட்டுமே செலுத்தப்பட்டது. இதனை அடுத்து ஊழியர்கள் புகார் செய்தனர்.
அதோடு மட்டுமல்லாமல் வாடகையும் கொடுக்க முடியாமல் போனதால் நிறுவனத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா: இந்து பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி… முக்கிய அறிவிப்புகள்
முதலாளிகளுக்கு அபராதம்
31 வயதான சிம் லிங் ஜென் மற்றும் 37 வயதான அவரது கணவர் வூ வென்சுன் ஆகியோருக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேலை இந்த அபராத தொகையை அவர்கள் செலுத்தத் தவறினால், 66 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் இருவர் மீதும் தலா சம்பளம் தொடர்பான 24 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வேலைவாய்ப்புச் சட்டம்
ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் அலைக்கழிப்பதை மனிதவள அமைச்சகம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாது என்பதை அது சுட்டிக்காட்டியது.
அதே போல சிங்கப்பூரின் வேலைவாய்ப்புச் சட்டங்களைப் பின்பற்றத் தவறும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ், சம்பளம் வழங்கத் தவறும் முதலாளிகளுக்கு S$3,000 முதல் S$15,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.