Last Updated:
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் நடைபெற்ற திருமணத்தில் சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால், திருமண வீடே களேபரமாகியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாததால் ஏற்பட்ட தகராறில், கல்யாண வீடு கலவர பூமியாக மாறியது. பந்திக்கு தாமதமாக வந்தவர்கள் அடிதடியில் ஈடுபட்ட விவகாரத்தில் நடந்தது என்ன?
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா நகரில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வந்தவர்களுக்கு காலை பந்தியில் சைவ உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. பின்னர், மதிய விருந்து சிக்கன் பிரியாணியுடன் தடபுடலாக தயாராகியுள்ளது.
இதை அறிந்த சிலர் காலை சாப்பாட்டை தவிர்த்துவிட்டு, பிரியாணியை ஒரு பிடி பிடிப்பதற்காக வயிற்றை காலியாக வைத்துள்ளனர். பிற்பகலில் பிரியாணி பரிமாறியதும் பலரும் பந்திக்கு முந்தியுள்ளனர். இரண்டு மூன்று ரவுண்டு முடிந்ததும் பின்னால் வந்தவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பந்தியில் அமர்ந்துள்ளனர். உணவு பரிமாற வந்தவர்கள் தட்டில் பிரியாணியை வைத்துள்ளனர். கொலைப் பசியில் இருந்த சிலர் அதில் லெக் பீஸ் எங்கே என்று தேடிப் பார்த்துள்ளனர். ஆனால், சிக்கன் பீஸ் இல்லாததால் கொலை வெறியாகியுள்ளனர். அடுத்தடுத்த தட்டுகளிலும் லெக் பீஸ் இல்லாததால், ஏமாற்றம் அடைந்தவர்கள் கொந்தளித்துள்ளனர்.
அது குறித்து உணவு பரிமாறியவர்களிடம் கேட்ட போது, சிக்கன் பீஸ் எல்லாம் காலியாகிவிட்டது. குஸ்கா மட்டுமே இருப்பதாக கூறியுள்ளனர். அதைக் கேட்டு ஆத்திரமடைந்தவர்கள், அங்கிருந்த சேர்களை தூக்கி வீசி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் அடாவடி செய்ததைப் பார்த்ததும், லெக் பீஸ் கிடைக்காத அனைவரும் வன்முறையில் இறங்கியுள்ளனர். இதனால், கல்யாண வீடே களேபரமாகியுள்ளது. இதையடுத்து இரு வீட்டாரும் சேர்ந்து உறவினர்களை சமாதானம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரியாணியில் லெக் பீஸ் இல்லாத ஆத்திரத்தில், திருமண விழாவை களேபரமாக்கிய வீடியோ வெளியாக அம்ரோஹா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


