Cricket
oi-Vigneshkumar
சென்னை: 5 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2027 ஐபிஎல் தொடருக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், சிஎஸ்கே அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது.
சிஎஸ்கே அணி கடந்த சில ஆண்டுகளாகவே தடுமாறி வந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் திணறி வந்தது. இதனால் அணியின் நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்தச் சூழலில் தான் சுமார் 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கின் பதவி விலகினார்.

பிளெமிங்
பிளெமிங் 2009ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையின் கீழ் சிஎஸ்கே 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றது. இருப்பினும், இப்போதுள்ள டி20 ஆட்டத்திற்கு ஏற்ப பிளெமிங் மற்றும் அவரது டீமின் ஸ்டைல் மாறவில்லை என்றும் இதுவே அணியின் தொடர் தோல்விக்கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தச் சூழலில் தான் கடந்தாண்டு நடந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிளெமிங் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் நியமிக்கப்பட்டார். பிரெண்டன் மெக்கல்லமுக்கு பதிலாக இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை பிளெமிங் ஏற்றுள்ளார்.
சிஎஸ்கே
மறுபுறம் சிஎஸ்கேவின் பயிற்சியாளர் யார் என்பதில் கேள்வி இருந்து வந்தது. பல்வேறு பெயர்கள் இதில் அடிப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரின் பெயர் அடிப்பட்டது. ஒரு கட்டத்தில் தோனியே கூட சிஎஸ்கே பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியானது. இந்தச் சூழலில் தான் சிஎஸ்கேவின் தலைமை பயிற்சியாளர் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானை தலைமை பயிற்சியாளராக சிஎஸ்கே நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
தலைமை பயிற்சியாளர்
ஜாகீர் கான் இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய அனுபவம் கொண்டவர். வீரராக மட்டுமின்றி, பயிற்சியாளர் மற்றும் நிர்வாகப் பணிகளிலும் அவர் அனுபவம் பெற்றுள்ளார். பிளெமிங்கின் 18 ஆண்டு பயணத்திற்கு பிறகு தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஜாகீர் கான் ஏற்றிருப்பது சிஎஸ்கே அணி அடுத்த கட்டத்திற்கு முக்கியமானதாக இருக்கும்!
ஜாகீர் கான்
ஐபிஎல் அணி ஒன்றுக்கு தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை! இருப்பினும் அணி மேலாண்மையில் ஜாகீர் கானுக்கு ஏற்கனவே நீண்ட அனுபவம் உள்ளது. 2017ம் ஆண்டு இந்திய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக பணியாற்றிய அவர், அதன் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கிரிக்கெட் நிர்வாகம் சார்ந்த பொறுப்புகளில் பல ஆண்டுகள் பணியாற்றினார். தலைமை பயிற்சியாளர் மஹேலா ஜெயவர்தனேவுடன் இணைந்து, அணியின் பந்துவீச்சாளர்கள் மற்றும் இளம் வீரர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வழிகாட்டியாகவும் ஜாகீர் கான் பணியாற்றினார். அப்போது தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் அணியின் பயிற்சி குழுவினருடன் இணைந்து செயல்பட்டார். அவரது பணி வெறும் ஆலோசனை வழங்குவதோடு நின்றுவிடாமல்.. வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் நிர்வாக பணிகளிலும் ஜாகீர் கான் ஈடுபட்டார்.



