Last Updated:
ஆந்திரா மாநிலத்தின் வனப்பகுதியில் சாலை இல்லாத காரணத்தால், ஒரு பெண்ணின் உடலை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு குடும்பத்தினர் ‘டோலி’யில் சுமந்து செல்வது சமூக வலைதளங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சாலை வசதி இன்னும் கனவாகவே உள்ள பழங்குடி கிராமங்களின் துயரமான வாழ்க்கை நிலையை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஆந்திரா மாநிலத்தின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டத்தில் உள்ள சிந்தமாலா என்ற மலைப்பாங்கான வனப்பகுதி கிராமத்தில், 40 வயதுடைய ஜூடாங்கி என்ற பெண் சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்ததையடுத்து, அவரது உடலை கிராமத்திற்குக் கொண்டுவர சாலை வசதி இல்லாததால் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணின் உடலை 12 கிலோ மீட்டர் தூரம் ‘டோலி’யில் சுமந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிகழ்வு, சலூரு மண்டலத்தின் கோடமா பஞ்சாயத்து எல்லைக்குள் அரங்கேறியது. ஜூடாங்கியின் உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸால் கோணங்கி வரை மட்டுமே செல்ல முடிந்தது. அதன் பின்னர் அடர்ந்த காடு மற்றும் வழுக்கும் சேற்று நிலம் இருந்த காரணத்தால் ஆம்புலன்ஸால் அங்கு செல்ல முடியவில்லை. எனவே, உறவினர்கள் மரக் குச்சிகளும், துணிகளும் கொண்டு தற்காலிகமாக ஒரு “டோலி”யை தயார் செய்து, மழை மற்றும் சேறு வழியாக 12 கி.மீ. தூரம் நடந்து அந்தப் பெண்ணின் உடலை கிராமத்துக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.
இந்த துயரமான பயணம் பல மணிநேரம் நீடித்ததாகவும், வழியில் பலமுறை ஓய்வு எடுக்க வேண்டியிருந்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். “ஒவ்வொரு அடியும் ஆபத்தானது. விழுந்துவிடுவோமோ என்கிற பயம் இருந்தது, ஆனாலும் எங்களுக்கு வேறு வழியில்லை” என்று அந்த ஊர் நபர் ஒருவர் கூறினார்.
சிந்தமாலா போன்ற பழங்குடி கிராமங்களில் இன்னமும் சாலை வசதி இல்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் என பலரும் பெரும்பாலும் தற்காலிக ஸ்ட்ரெச்சர்களில் அருகிலுள்ள சாலை அல்லது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். கிராம மக்கள் பலமுறை சாலை அமைக்க கோரிக்கை வைத்தும், எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. “ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி கொடுக்கிறார்கள், ஆனால் யாரும் திரும்பி வருவதில்லை” என்று முதியவர் ஒருவர் கூறினார்.
October 16, 2025 6:24 PM IST


