துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ஐ நடத்திய நாடு பாகிஸ்தான் என்று இப்போது யாராவது சொன்னால்தான் பலருக்கும் தெரியும். ஓஹோ என்பார்கள். ஆனால், ஐசிசியைப் பொறுத்தவரையில் என்ன நடக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளதாக பலரும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால், பரிசளிப்பு மேடையில் போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதி ஒருவர் கூட இல்லை என்பது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
ஐசிசி சேர்மன் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலர் தேவஜித் சைகியா, நியூஸிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குநர் ரோஜர் ட்வூஸ் ஆகியோர் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமைர் அகமது துபாயில்தான் இருந்தார், ஆனால் பரிசளிப்பு மேடைக்கு அவரை அழைக்கவில்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி, நாட்டின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால் அவரால் துபாய்க்கு வர முடியவில்லை. பிரசிடெண்ட் அசிப் ஜர்தாரி இஸ்லாம்பாத்தில் இணை நாடாளுமன்ற கூட்டத்தில் பேசும் நிகழ்ச்சி இருப்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் கலந்து கொள்ள முடியவில்லை. இதை மோசின் நக்வி ஐசிசியிடம் தெரிவித்து விட்டார். யார் யார் மேடைக்கு வர வேண்டும், பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை ஐசிசிதான் முடிவு செய்கிறது என்றும் ஆகவே பாகிஸ்தான் பிரதிநிதி ஒருவர் இருந்தும் அவரை அழைக்காதது குறித்து சர்ச்சைகள் மூண்டுள்ளன.
இதனையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்களது சிஇஓ, அங்கு இருந்தும் ஏன் மேடைக்கு அழைக்கவில்லை என்பதை ஐசிசியிடம் எடுத்து செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ ஷோயப் அக்தர் இது குறித்து வீடியோ ஒன்றில் கூறும்போது, “இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றது, ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியப் பிரதிநிதிகள் ஒருவரும் மேடையில் இல்லை என்பது விசித்திரமாக இருந்தது. பாகிஸ்தான் தான் போட்டித் தொடரை நடத்தியது. எனக்கு இதுதான் புரியவில்லை.
கோப்பையை அளிக்க ஏன் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பிரதிநிதி கூட அங்கு இல்லை? இது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. இதனை யோசித்துப் பார்க்க வேண்டும். இது உலக மேடை இங்கு கட்டாயம் பாகிஸ்தான் பிரதிநிதி இருந்திருக்க வேண்டும். ஒருவர் கூட இல்லாதது மனதுக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது.” என்று வேதனை தெரிவித்துள்ளார்.