Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சவால் கொடுக்கும் அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய அணி இன்று தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவின் முக்கிய சாதனை குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. அந்த வகையில், இந்திய அணியை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இதுவரை வீழ்த்தாத ஐந்து அணிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜிம்பாப்வே: இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரே ஒரு முறை மட்டுமே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் மோதியுள்ளன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 288 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியால் 274 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
வங்கதேசம்: 2017 இல் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. வங்கதேச அணி இந்தியாவை இதுவரை வீழ்த்தியது கிடையாது.
கென்யா: இந்த அணி நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவில்லை. இருப்பினும், 2000 மற்றும் 2004 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் கென்யா விளையாடியது. இந்தியாவுடன் விளையாடிய 2 போட்டிகளில் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்திலும் கென்யா அணி தோல்வி அடைந்தது.
இங்கிலாந்து: 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியின் போது இந்தியா இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இரு அணிகளும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 முறை விளையாடி உள்ளன. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
தென் ஆப்பிரிக்கா: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சவால் கொடுக்கும் அணிகளில் தென்னாப்பிரிக்காவும் ஒன்று. இந்தியாவும் தென் ஆப்பிரிக்காவும் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளன. இவை அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
February 20, 2025 4:23 PM IST


