Last Updated:
யுஜிசி புதிய விதிமுறைகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, 2012 விதிமுறையை மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டது; மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைக் களையும் பொருட்டு, பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளில் தெளிவு இல்லை என கூறி, அதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யூஜிசி-யின் புதிய விதிமுறைகளுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த விதிமுறைகள் சமூகத்தை பிளவுப்படுத்தும் வகையிலும், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் இதில் தலையிடுவது மிகவும் அவசியம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், SC, ST பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்கும் 2012ஆம் ஆண்டு விதிமுறையை இடைக்காலமாக மீண்டும் செயல்படுத்தவும் அறிவுறுத்தினர். யூஜிசி-யின் விதிமுறைகள் தெளிவற்றதாக இருப்பதால், இதுகுறித்து நிபுணர்கள் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கும், யூஜிசிக்கும் ஆலோசனை வழங்கினர்.
புதிய விதிமுறைகளின் நோக்கம் என்ன, பலன்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் சாதி பாகுபாடு நிலவுவதற்கு அதிருப்தி தெரிவித்தனர். தொடர்ந்து புதிய விதிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Delhi,Delhi,Delhi


