Last Updated:
சாதாரண குடும்பச் சண்டையில், மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டு, கணவனும் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் மனைவியை அடித்து கொன்ற கணவன், பிறகு கண்ணீருடன் வீடியோ பதிவு செய்து, தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண குடும்பச் சண்டை இரு உயிர்களைப் பறித்த சம்பவத்தின் பின்னணி என்ன?
ஒடிசாவைச் சேர்ந்தவர் 31 வயதான தீபந்த் சபர். இவரது மனைவி 27 வயதான மஞ்சுளா சபர். இவர்கள் இருவரும், பெங்களூருவின் புறநகர்ப் பகுதியில் உள்ள அனேகல் தாலுகாவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். இருவரும் பொம்மசந்திராவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இந்த ஜோடி ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குள் அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அற்ப விஷயத்திற்காக தம்பதியினரிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. வழக்கமான சண்டையாக தொடங்கியபோதும், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எல்லை மீறிச் சென்றிருக்கிறது. இதனால் தீபந்த் சபருக்கு கோபம் தலைக்கேறி இருக்கிறது. ஒரு நிமிடம் தன்னிலை மறந்த தீபந்த் சபர் மஞ்சுளாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். அதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த மஞ்சுளா அதன் பிறகு எழுந்திருக்கவே இல்லை.
மயங்கித்தான் கிடக்கிறார் என நினைத்த தீபந்த் சபர் சிறிது நேரம் கழித்து எழுப்பிப் பார்த்தபோதுதான் தெரியவந்தது: மஞ்சுளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்பது. மிரண்டுபோன தீபந்த் சபர் மனைவியின் உடலைப் பார்த்து அழுதிருக்கிறார். பின்னர் தீபந்த் ஒடியாவில் ஒரு மரணக் குறிப்பை எழுதியபின், அவரது உடலின் முன்பு அமர்ந்து செல்போனில் ஒரு வீடியோவைப் பதிவு செய்தார். அதில் அவர் மஞ்சுளாவின் நெற்றியில் குங்குமம் பூசி கண்ணீர்விட்டு அழுதார். பின்னர், மனைவியைப் பிரிந்து வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர், வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சாதாரண குடும்பச் சண்டையில், மனைவி அடித்துக் கொலை செய்யப்பட்டு, கணவனும் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Bangalore,Karnataka
சாதாரண குடும்பச் சண்டையின்போது தாக்கியதில் உயிரிழந்த மனைவி…! தனது உயிரையும் மாய்த்துக் கொண்ட கணவன்…


