SINGAPORE: சாங்கி விமான நிலையத்தில் திருடிய 2 இந்தியர்களில், ஒருவருக்கு சிறைத்தண்டனையும் மற்றொருவருக்கு S$700 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கொல்கத்தாவிலிருந்து சிங்கப்பூருக்கு கடந்த ஜூன் 2 ஆம் தேதி விமானத்தில் வந்த அந்த இரண்டு பயணிகளும், பாலிக்கு புறப்படுவதற்கு முன்பு சாங்கி விமான நிலையத்தின் ட்ரான்சிட் பகுதியில் இருந்தனர்.
துவாஸில் லாரி கவிழ்ந்து விபத்து (Video): ஊழியர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
அப்போது, விமான நிலையத்தில் உள்ள கடைகளில் அவர்கள் திருடியதாகவும், பின்னர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் முன்னர் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அவர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
முதல் சம்பவம்
அதில் 30 வயதான கார்க் பிரஷா, இந்தியாவில் இருந்து வந்த பிறகு முனையம் 2ல் உள்ள சார்லஸ் & கீத் என்ற கடைக்குள் நுழைந்தார்.
கடையை சுற்றிப் பார்த்த கார்க், ஒரு கருப்பு நிற haversack பேக்கை எடுத்து லக்கேஜ் டிராலியில் வைத்து, பின்னர் அதற்கு பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறினார்.
அவரின் இந்த நடவடிக்கையை கடை ஊழியர் கவனித்தார், பின்னர் இது பற்றி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட கார்க், சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டார். அதன் பிறகு $80க்கும் அதிக விலையுள்ள haversack பேக் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.
இந்த நிலையில், திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் ஜூன் 16 அன்று $700 அபராதம் விதிக்கப்பட்டது.
வெளிநாட்டுப் பணிப்பெண் மீது இச்சை.. “அழுது ஊரை கூட்டிய பெண்” – சிங்கப்பூரருக்கு சிறை
இரண்டாவது சம்பவம்
அதே போல, 29 வயதான கோயங்கா சிம்ரன் என்ற இந்திய பெண்ணும் திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அவருக்கு ஜூன் 16 அன்று எட்டு நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்க இதேபோன்ற மற்றொரு குற்றச்சாட்டும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
கோயங்காவும் ஜூன் 2 ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்து முனையம் 3ல் பாலிக்கு செல்லும் இணைப்பு விமானத்திற்காக ட்ரான்சிட் பகுதியில் காத்திருந்தார்.
அன்று மதியம் 1.40 மணியளவில் ஃபர்லா கடைக்குள் நுழைந்த கோயங்கா, S$300க்கும் அதிகமான மதிப்புள்ள மஞ்சள் நிறப் பையை எடுத்து, லக்கேஜ் டிராலியில் வைத்துவிட்டு, பணம் செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறினார்.
மேலும், முனையம் 2ல் உள்ள ஒரு அழகுசாதனக் கடையில் S$200க்கும் அதிகமான மதிப்புள்ள வாசனை திரவிய பாட்டிலைத் திருடியதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
நீதிபதி கருத்து
“அவர் சிங்கப்பூரில் 10 மணிநேரம் மட்டுமே இருக்க வேண்டும், ஆனால் அந்த நேரத்தில் மொத்தம் $500க்கும் அதிக மதிப்புள்ள பொருட்களை திருட அவர் முடிவு செய்தார்” என்று நீதிபதி கூறினார்.
அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைவாக செயல்பட்டதால் அவர்கள் பிடிபட்டதாகவும், இல்லையென்றால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிருப்பார்கள் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
கார்க்கும் கோயங்காவும் ஒருவரையொருவர் தெரிந்தவர்கள் என்றாலும், அவர்கள் திருட்டு கும்பலின் ஒரு பகுதியாகச் செயல்படவில்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கூறினர்.

