International
oi-Vigneshkumar
ரியாத்: ஏமனின் ஹவுதி படையினருக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கான அவசர உதவி எண்களை ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. மேலும், சவுதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும்போது இந்தியர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலால் முதலில் ஈரானில் ஏற்பட்ட பதற்றம் இப்போது மெல்ல அப்படியே மற்ற வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியாவில் ஹவுதி படை தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹவுதிக்கள் நடத்தும் தாக்குதலால் சவுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சவுதி
இதற்கிடையே சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்காக, ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் தொலைப்பேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளன.
ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம்
செல்போன்: +966-554412016, +966-542126784
வாட்ஸ்அப்: +966-536216082
ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகம்
செல்போன்: +966-12-2614093, +966-556122301
வாட்ஸ்அப்: +966-536209704
சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் அவசர உதவி தேவைப்படும் போது இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவில் வான்வழித் தாக்குதல் நடக்கும்போது அங்குள்ள இந்தியர்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியிருந்தது. மேலும், அங்கு நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.
விமான சேவை பாதிப்பு
அதேநேரம் ரியாத் மற்றும் ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகங்கள் மற்றும் VFS மூலம் வழங்கப்படும் பாஸ்போர்ட், ஆவண சான்றளிப்பு உள்ளிட்ட சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர காரணங்களால் சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற விரும்பும் இந்தியர்கள், அண்டை வளைகுடா நாடுகளின் விமான நிலையங்கள் வழியாக பயணிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கத்தார் மற்றும் பஹ்ரைன் நாடுகளில் இருந்து விமான சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு.. ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்கு செல்லும், அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் அக்டோபர் 17ம் தேதி வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்தது. இதேபோல் ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா நகரங்களுக்கான அனைத்து விமானங்களும் அக்டோபர் 17ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனமும் அறிவித்துள்ளது.
ஹவுதி
ஏமனில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படையினர், சவுதி அரேபியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதியின் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக பல விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை ரத்து செய்து வரும் நிலையில், ரியாத் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை வரை ரியால் விமான நிலையம் மூடப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சவுதியில் குழப்பமான ஒரு சூழலே தொடர்ந்து நிலவி வருகிறது.

