International
oi-Vigneshkumar
ரியாத்: சவுதி அரேபியா மீது தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், துருக்கி மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களது படைகளை சவுதி அரேபியாவுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் தான் மூன்று நாடுகளுக்கும் இடையே இஸ்லாமிய நேட்டோ போன்ற பரஸ்பர பாதுகாப்பு கூட்டணி உருவாக்கப்பட்ட நிலையில், இப்போது படைகள் அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் படைகளும் வளைகுடாவில் குவிக்கப்படுகிறது.
உலகின் மிக வலிமையான பாதுகாப்பு கூட்டமைப்பு என்றால் அது நேட்டோ தான். அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்த நேட்டோவில் இணைந்துள்ளன. இதற்கிடையே கடந்த சில காலமாகவே இஸ்லாமிய நாடுகளுக்கு கிட்டத்தட்ட அதேபோல ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது.

இஸ்லாமிய நேட்டோ
முதற்கட்டமாக சவுதி அரேபியா, துருக்கி நாடுகளுடன் இணைந்து பாகிஸ்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ‘மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன. மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மற்ற நாடுகள் அதற்கு ஆதரவாக உதவ வேண்டும் என்ற பாயிண்ட் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நேட்டோ கூட்டணியில் 2வது பெரிய ராணுவத்தை கொண்ட துருக்கி, அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்லாமிய உலகின் ஒரே நாடான பாகிஸ்தான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய சக்தியான சவுதி அரேபியா ஆகியவை பாதுகாப்பு ரீதியாக இணைந்துள்ளன.
இதற்கிடையே சமீப காலமாக சவுதி மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் சவுதி மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதை சவுதி சமாளித்தாலும் கூட நிலைமை முழுமையாக நார்மலாகவில்லை. இந்த சூழலில் தான் சவுதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் மற்றும் துருக்கி தனது படைகளை அனுப்ப உள்ளன.
கடும் கண்டனம்
மூன்று நாடுகளின் பிரதிநிதிகளும் நேற்று திங்கள்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் அவசர ஆலோசனை நடத்தினர். அப்போது சவுதி அரேபியா மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. குறிப்பாக மெக்கா மற்றும் மதீனா ஆகிய புனித நகரங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், சவுதி அரேபியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான எந்தவொரு தாக்குதல் அல்லது அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறப்பட்டு இருந்தது. அதேநேரம் இந்த தாக்குதல்களை ஹவுதி அமைப்பு நடத்தியதாக கூறப்படும் நிலையில், அந்த அமைப்பின் பெயர் கூட்டு அறிக்கையில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை.
களமிறங்கும் படைகள்
கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தங்களது ராணுவ படைகள் மற்றும் தேவையான ராணுவ திறன்களை சவுதி அரேபியாவுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மூன்று நாடுகளும் தெரிவித்துள்ளன. அதேநேரம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்படும் துருக்கி மற்றும் பாகிஸ்தான் படைகள் அங்கு எந்த வகையான பணிகளில் ஈடுபடுத்தப்படும் என்பது விரிவான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும், எத்தனை படைகள் அனுப்பப்படும், எப்போது அனுப்பப்படும் உள்ளிட்ட விவரங்களும் இல்லை.
பின்னணி
ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடைந்த ஜூலை மாதம் முதல் சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுதி தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. ஏனென்றால் ஏமனில் உள்ள அரசுக்கு சவுதி ஆதரவாக இருக்கிறது. இதன் காரணமாகவே சவுதியை நேரடியாக ஹவுதி தாக்கி வருகிறது. சவுதி நகரங்கள், எண்ணெய் உள்கட்டமைப்புகள் மற்றும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் ஹவுதி கை ஓங்கிய நிலையில், அரசு படையிடம் இருந்து பல பகுதிகள் ஹவுதி வசம் சென்றன. இதையடுத்து ஹவுதிகளிடம் உள்ள பகுதிகளை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் ஏமன் அரசு படைகள் பதிலடி தாக்குதல்களை தொடங்கின. இந்த நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு அளித்து வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழலே தொடர்கிறது.

