Last Updated:
புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதிச்சடங்குகளுக்குப் பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
போப் பிரான்சிஸ் உடல் இன்று அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் அவரின் இறுதி ஆசை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையை 12 ஆண்டுகளாக வழிநடத்திய போப் பிரான்சிஸ் கடந்த 21-ந்தேதி காலமானார். இதனைத் தொடர்ந்து, போப் வசித்த காசா சண்டா மார்டாவில் உள்ள தேவாலயத்தில் வைக்கப்பட்ட போப் உடல், கடந்த புதன் கிழமை வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களாக போப் பிரான்சிஸ் உடலுக்கு பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ள இறுதிச்சடங்குகளுக்குப் பின், புனித மேரி மேஜர் பேராலயத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
இந்நிகழ்வில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், இத்தாலி அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா, ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோருடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்க உள்ளார்.
போப் பிரான்சிஸின் உடல் ரோமில் உள்ள புனித சான்டா மரியா மாகியோர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குதான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என போப் பிரான்சிஸ் ஏற்கெனவே அறிவித்திருந்தார். வழக்கமாக போப்-களின் உடல் மூன்று அடுக்கு கொண்ட சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யப்படும். ஆனால் போப் பிரான்சிஸ் தனது உடலை மரத்தால் ஆன, துத்தநாகத்தால் மூடப்பட்ட ஒரு எளிய சவப்பெட்டியில் வைக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.
சவப்பெட்டியில் போப்பாண்டவர் பதவியைப் பற்றி எந்தக் குறிப்பையும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் தனது Papal பெயரான பிரான்சிஸ் என்பதன் லத்தீன் எழுத்துக்களான “பிரான்சிஸ்கஸ்” (Franciscus) என்பதை மட்டும் பொறித்தால் போதுமானது எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி இன்றைய இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. போப்-பின் இறுதி நிகழ்வுகளுக்குப் பின்னர், அடுத்த போப்பைத் தேர்வு செய்வதற்கான கான்கிளேவ் அடுத்த மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 26, 2025 9:27 AM IST


