Last Updated:
அஜிங்க்யா ரஹானே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 10 ஆண்டுகளில் 13,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2026 தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டார்.
இந்திய வீரர் ரஹானே கடந்த 10 ஆண்டுகளாக 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒரு நாள் போட்டிகள், 20 டி20 போட்டிகள் மற்றும் 212 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி மொத்தம் 13,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்களும், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3 சதங்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் 2 சதங்கள் விளாசியுள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டுள்ள ரஹானே, 2020-21 பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில், பல முக்கிய வீரர்கள் இல்லாதபோதும், ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்ற கணக்கில் இந்தியாவை வெற்றி பெற வைத்தது அவரது கிரிக்கெட் வாழ்வில் சிறந்த தருணமாக அமைந்தது.
கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2023 ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதே அவரது கடைசி சர்வதேச போட்டியாகும். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளுக்காக விளையாடிய ரஹானே கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் கொல்கத்தா அணி 2026 ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
இந்நிலையில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவித்துள்ளார். தனது ஓய்வு குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “தொப்பி எண் 278 விடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள், நீங்கள் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அனைவருக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


