Last Updated:
அமெரிக்கா, ஈரான் அணு உலைகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்து, இது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானின் ஃபோர்டோ பகுதியில் சாதாரண ஏவுகணைகள் ஊடுருவ முடியாத வகையில் மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள அணு உலை மீது தாக்குதல் நடத்த பங்கர் பஸ்டர் எனப்படும் அதிநவீன ஏவுகணையை வழங்கும்படி அமெரிக்காவிடம் இஸ்ரேல் கோரிக்கை விடுத்து வந்தது.
இந்த சூழலில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் இஸ்பகான் ஆகிய மூன்று அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். குண்டுகளை வீசித் தாக்கும் அதிநவீன பி-2 போர் விமானங்கள் ஈரானின் மூன்று அணு உலைகள் மீது குண்டுகளை வீசியுள்ளன. போர்டோ அணு உலை மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியதாகவும், இதில், அந்த அணு உலை முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக அமெரிக்காவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்றும் அறிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கவேண்டும் என பாகிஸ்தான் அரசு பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்து டிரம்ப், “நான் இதுவரை 4 அல்லது 5 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் எனக்கு தரமாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஈரான் மீது வான் வழி தாக்குதல் நடத்தியது.
இதற்கு பாகிஸ்தான் தனது கண்டனம் தெரிவித்துள்ளது. தனது கண்டனத்தில், “இந்த தாக்குதல் அனைத்து சர்வதேச சட்டங்களுக்கும் எதிரானது. தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
June 22, 2025 3:10 PM IST
“சர்வதேச சட்டங்களுக்கு எதிரான அமெரிக்கா…” – ஈரான் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்


