Last Updated:
39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது.
சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா. 20 ஆயிரம் ரன்களை கடந்த 4 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடைபெற்றது. தொடர்ச்சியாக 20 டாஸ் தோல்விகளுக்குப் பிறகு இன்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய ரிக்கெல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான டி காக் கேப்டன் பவுமாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுமா நிதானமாக விளையாடி 67 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மேத்யூ பிரிட்ஸ்கே 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய நிலையில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா அணி ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த போதும் மறுபக்கம் இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி வந்தனர். இறுதியாக 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஒரு புறம் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாட மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி வந்தார். இந்திய அணியின் அதிரடியை தடுக்க தென்னாப்பிரிக்கா வீரர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்திய அணி 155 ரன்களை எட்டிய போது ரோஹித் சர்மா 75 ரன்களில் அவுட்டானார்.
39.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்த இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இந்த மேட்ச்சின்போது இந்திய அணியின் ரோஹித் சர்மா 20 ஆயிரம் ரன்களை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்துள்ளார்.
மேலும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ராகுல் டிராவிட்டிற்கு பின்னர் 20 ஆயிரம் ரன்களை கடந்த 4 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா ஏற்படுத்தியுள்ளார்.
December 06, 2025 10:23 PM IST


