• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

சர்வதேச அமைதிக்கு வித்திடுவதில் ‘சவுதி மாடல்’ மத்தியஸ்த பங்கு என்ன? – ஒரு பின்புலப் பார்வை | Saudi Arabia strong emerging face as peace mediator explained

GenevaTimes by GenevaTimes
May 16, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
சர்வதேச அமைதிக்கு வித்திடுவதில் ‘சவுதி மாடல்’ மத்தியஸ்த பங்கு என்ன? – ஒரு பின்புலப் பார்வை | Saudi Arabia strong emerging face as peace mediator explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சவுதி அரேபியா என்றவுடன் அதன் எண்ணெய் வளமும், மெக்கா, மதினா போன்ற புனிதத் தலங்களால் அதற்குள்ள மத ரீதியிலான கலாச்சார பின்புலமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், சவுதி அரேபியா சமீப காலமாக சர்வதேச மத்தியஸ்தத்தின் அடையாளமாக மாறிவருகிறது. அவ்வாறாக, தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஆழமான, தெளிவான கொள்கைகளை வகுத்து செயல்பட்டு வருகிறது.

மத்திய ஆசியாவின், மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் அமைதியை விரும்பும் சவுதி அரேபியா அப்பகுதிகளில் மட்டுமல்லாது உக்ரைன் – ரஷ்யா அமைதி வரை தனது மத்தியஸ்த செயல்பாடுகளை நீட்டி வருவதற்கான பின்புலத்தைத் தேடியபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கப் பெற்றன. ஒரு சின்ன, ஆனால் கவனிக்கத்தக்க வரலாற்றுப் பின்புலமும், மாற்றத்துக்கு வித்திட விரும்பும் ஓர் இளம் அரச வாரிசும், இங்கே பேசப்பட வேண்டியவையாக இருக்கின்றன. கூடவே, திரைமறைவில் இருந்து காய் நகர்த்தும் அமெரிக்கா பற்றியும் பேச வேண்டும்.

அந்த இளம் முகம் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான். அவரின் தலைமையில் பிராந்திய, சர்வதேச அரசியலில் சவுதி அரேபியாவின் பங்கு மீள்கட்டமைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள். மேலும், பிரச்சினைகளுக்குரிய நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யும்போது சவுதி அரேபியா அனைவரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை, கூட்டு பிராந்திய பொறுப்பு, மோதலுக்குத் தீர்வாக அமையக் கூடிய, மறு ஒருங்கிணைப்பை சாத்தியப்படுத்தக் கூடிய ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்குவிக்கிறது. இந்த ‘சவுதி மாடல்’ மத்தியஸ்தம் தான் தற்போது சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது எனலாம்.

இது நேரடியாக போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு மட்டுமல்ல, நீண்ட கால விரோதிகளாக இருந்துவரும் அமெரிக்கா – சிரியா இடையே கூட ஒத்துழைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில் ரியாத்தில் நடந்த அமெரிக்கா – சவுதி அரேபியா முதலீட்டு மன்றத்தில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கிக் கொள்வதாக அறிவித்தார். இது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப் பெரிய மாற்றம் எனலாம். அப்படிப்பட்ட ஒர் மைல்கல் அறிவிப்பை ட்ரம்ப் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இருந்தோ அல்லது ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்தில் இருந்தோ அல்லது நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இருந்தோ அறிவிக்கவில்லை. மாறாக, ரியாத்தில் இருந்து அறிவித்துள்ளார். இதனை, புவி அரசியலில் ஏற்படுக்ககூடிய விளைவுகளில் சவுதி அரேபியா ஏற்படுத்தும் தாக்கத்தின் ஒரு சாட்சி எனலாம்.

சிரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்வது என்பது சாதாரணமான விஷயமல்ல. மேலோட்டமாகப் பார்த்தால் இயல்புக்கான முதல் அடிதான் என்றாலும், ஆழமாகப் பார்த்தால் இது சிரியா கடந்த 10 ஆண்டுகளாக சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டுக் கிடந்ததை மாற்றியமைக்கும் திறவுகோல். அமெரிக்காவின் அறிவிப்பால் இனி சிரியாவில் முதலீடுகள் வரும், வெளிநாட்டுகளுடன் ராஜாங்க ரீதியிலான உறவுகள் மீட்கப்படும்.

முத்தாய்ப்பாக சிரிய மக்களுக்கு, ‘உங்களுக்காக இந்த உலகம் இன்னொரு அத்தியாயத்தை உருவாக்க ஆதரவு தருகிறது’ என்ற நம்பிக்கையைக் கடத்தும். ஏனெனில், உள்நாட்டுக் கலவரங்கள் எங்கெல்லாம் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் மக்களை பகடைக்காயாக வைத்துக் கொண்டு யாரோ யாருக்காகவோ ஒரு போலியான போரை நடத்திக் கொண்டிருப்பார்கள். இழுபறியாகச் செல்லும் அந்தப் போர்களில் சாமான்ய மக்கள்தான் செத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், சவுதியின் மத்தியஸ்தம் சிரிய மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை பாய்ச்சியுள்ளது.

சிரியாவுக்கான இந்த விடிவுகாலம் சவுதி முயற்சியில் சமீபத்திய வெற்றி என்றால், முந்தைய காலங்களில் சில உள்நாட்டுக் கலவரங்கள், மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து ஒரு குட்டி வரலாற்றையும் வைத்துள்ளது சவுதி அரேபியா.

கடந்த 1989-ம் ஆண்டு லெபனான் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் சவுதி அரேபியா பெரும் பங்காற்றியது. அப்போது ஏற்பட்ட டைஃப் ஒப்பந்தம் (Taif Agreement ) லெபனான் இறையாண்மை பாதுகாக்கப்பட பெரிதும் உதவியது. 2007-ம் ஆண்டு காசாவில் இருவேறு பாலஸ்தீன உரிமைக் குழுக்களாக இருந்த ஹமாஸ் – ஃபத்தா இடையே சமரசம் ஏற்படுவதை சவுதி அரேபியா உறுதி செய்தது. இதன்மூலம் காசாவில் உள்ளுக்குள்ளேயே குழு மோதல் நடப்பது நிறுத்தப்பட்டது. இதற்கு மெக்கா ஒப்பந்தம் (Mecca Agreement) என்று சவுதி அரேபியா பெயர் வைத்தது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் | டொனால்டு ட்ரம்ப்

2022-ம் ஆண்டு முதல், ஏமனில் போர் நிறுத்தம் கொண்டுவரும் முயற்சியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல். 2022-ல் ரஷ்யா – உக்ரைன் இடையே பரஸ்பரம் போர்க் கைதிகளை அவரவர் நாட்டுக்கு திரும்ப வழிவகை செய்யும் ஒப்பந்தத்திலும் சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்தது. 2023-ம் ஆண்டு தொடங்கி சூடானில் தீவிரமான உள்நாட்டுக் கலவரம் நடைபெற்று வருகிறது. அங்கு அமைதியை நிலைநாட்ட அமெரிக்காவுடன் இணைந்து ஜெட்டா, ஸ்விட்சர்லாந்து எனப் பல இடங்களில் நீண்டகால பேச்சுவார்த்தையை சவுதி நடத்திவருகிறது.

அண்மையில் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் மோதலில் ஈடுபட்டபோது சவுதி வெளியுறவு இணை அமைச்சர் இரு நாடுகளுக்கும் அடுத்தடுத்துச் சென்று அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வலியுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

ஏன் இந்த மாற்றம்? – சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தப் படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌ அவரை கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் எனவும் துருக்கி வலியுறுத்தியது. ஆனால், சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

வளமை, கலாச்சார அடையாளங்கள் தாண்டி சவுதிக்கு இருந்தக் கொடூர முகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் அந்நாட்டுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. அதனை உணர்ந்து கொண்டதால் இதுவரை அமெரிக்காவிடம் இருந்து தன்னை எச்சரிக்கையாக விலக்கி வைத்திருந்த சவுதி தற்போது நட்பு பாராட்டுவதும் அதற்காகத்தான்.

சவுதியின் இந்த திடீர் மாற்றங்கள் குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் – பொது நிர்வாகத் துறை முன்னாள் தலைவர் ராமு மணிவண்ணன் கூறுகையில், “கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக இருந்த தன் மீதான உலகளாவிய பார்வை மாற வேண்டும் என்று சவுதி விரும்புகிறது. ஈரானுடன் சவுதிக்கு நீண்ட கால மோதல் நிலவும் சூழலில் சவுதியின் புதிய அவதாரத்துக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

மேற்கு ஆசியாவில் ஈரானுக்கு மாற்றாக சவுதி அரேபியா சக்திவாய்ந்த நாடாக வளர வேண்டும் என்பது அமெரிக்காவின் புவி அரசியல் உத்தி. அந்த உத்தியும், சவுதியின் ஆர்வமும் தான் இப்போது அதற்கு ’சர்வதேச மீடியேட்டர்’ என்ற முகத்தை பிரகாசமாக்குகிறது. வளமை, கலாச்சார அடையாளம் மட்டுமே உலகத்தில் சக்திவாய்ந்த தேசமாக, பிரதானமான நாடாக தன்னை முன்னிலைப்படுத்திவிடாது என்பதை சவுதி அரேபியா உணர்ந்து கொண்டதால் மத்தியஸ்தராக இருப்பதை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆக, இதில் சவுதியின் சுய விருப்பம் மற்றும் அமெரிக்காவின் வியூகம் என இரண்டுமே இருக்கிறது. வளமை, கலாச்சார வீச்சைத் தாண்டி அரசியல் பலம் நோக்கிய சவுதி அரேபியாவின் பயணமாகத்தான் இந்த மீடியேஷன் முயற்சிகளைப் பார்க்க வேண்டும்.

ராமு மணிவண்ணன்

மேலும், கிழக்கு ஆசியாவில், மத்திய ஆசியாவில் நிலவக் கூடிய அமைதி, சவுதிக்கு எண்ணெய் வளத்துக்காக மட்டுமே தன்னை மற்ற நாடுகள் நாடுவதைத் தாண்டியும் வர்த்தக வட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் சவுதி விரும்புவதால் பிராந்திய அமைதியை உறுதி செய்ய விழைகிறது” என்றார்.

மேலும், சவுதியின் வளர்ச்சியை இந்தியா எவ்வாறாக எடுத்துக் கொள்ளும் என்று கேட்டபோது, “தெற்காசியாவில் இந்தியா ஒரு பிரதான நாடு. சக்திவாய்ந்த நாடு. அதுபோல் மேற்காசியாவில், மத்திய கிழக்கில் தன்னை முக்கியமான சக்தியாக சவுதி அரேபியா தகவமைத்துக் கொண்டு வருகிறது. அப்படியிருக்க, அதன் இந்த வளர்ச்சியை நட்பு நாடாக இந்தியா நேர்மறையாகவே அணுகும். அதன் மத்தியஸ்த முகத்துக்கு நேரடியாக அங்கீகாரம் கொடுக்காவிட்டாலும், ஒரு பிரச்சினையின்போது அந்நாட்டு அமைச்சர் ஒருவர் உடனடியாக இங்கு வந்து ஆலோசனை வழங்குவதை அனுமதிக்கும் அளவில் இந்தியா இருக்கும். ஏனெனில், சவுதியின் பின்னணியில் அமெரிக்காவின் தாக்கமும் இருக்கிறது என்பதை இந்தியா அறிந்திருக்கிறது” என்றார்.



Read More

Previous Post

இந்திய ஒப்பந்தங்கள் ரத்து தாக்கம்: துருக்கியின் செலிபி நிறுவனப் பங்குகள் வீழ்ச்சி! | Indian contract cancellation Turkey firm celebi aviation shares fall

Next Post

பிரபல இயக்குனரின் மகன் அதிரடி கைது | Makkal Osai

Next Post
பிரபல இயக்குனரின் மகன் அதிரடி கைது | Makkal Osai

பிரபல இயக்குனரின் மகன் அதிரடி கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin